Published : 24 Feb 2018 07:28 AM
Last Updated : 24 Feb 2018 07:28 AM

தலைமைச் செயலர் தாக்கப்பட்ட புகார்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டிலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் பறிமுதல்

டெல்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடங்கிய வன்தகட்டினை (ஹார்ட் டிஸ்க்) போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் தம்மை தாக்கியதாக தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீஸார், இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்துக்கு நேற்று காலையில் சென்ற போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் அடங்கிய வன்தகட்டினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, டெல்லி கூடுதல் துணைக் காவல் ஆணையர் (வடக்கு) ஹரேந்திர சிங் கூறியதாவது:

தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, முதல்வர் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்குமாறு கோரியிருந்தோம். ஆனால், இதற்கு, முதல்வர் அலுவலகத்திலிருந்து முறையான பதில் வரவில்லை. எனவே, அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடங்கிய வன்தகட்டினை போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு ஹரேந்திர சிங் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x