

2ஜி அலைக்கற்றை ஊழலின் தொடர்ச்சியாக டாடா ரியால்டி – யுனிடெக் நிறுவனத்தின் ரூ.1,700 கோடி முதலீடு குறித்தும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கடந்த 2007-ம் ஆண்டு டாடா ரியால்டி நிறுவனம், யுனிடெக் நிறுவனத்துடன் மேற்கொண்ட ரூ.1,700 கோடி ஒப்பந்தம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முதலீட்டுக்கும் அலைக்
கற்றை ஒதுக்கீட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், கடந்த 2008-ம் ஆண்டில் மேற்கொண்ட முதலீட்டு ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படவில்லை என்றும், தற்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சந்தேகம் உள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டாடா ரியால்டி செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சிபிஐ விசாரணை குறித்து எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை. ஆனால் இதற்கு முன்பு விசாரணை அமைப்புகள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கெனவே பதில் அளித்துள்ளோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். அந்த நிலையில் மாற்றம் இல்லை. தொழில் துறையில் அதிகபட்ச ஒழுக்கத்தை எங்கள் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.