Published : 28 Jan 2024 06:22 AM
Last Updated : 28 Jan 2024 06:22 AM

2 லட்சம் புத்தகங்களுடன் வீட்டை பொது நூலகமாக மாற்றிய 86 வயது முதியவருக்கு பத்மஸ்ரீ விருது

விட்டாலாச்சார்யா

ஹைதராபாத்: தெலங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டம், ராமண்ணாபேட் ஒன்றியத்தின் எல்லங்கி கிராமத்தை சேர்ந்தவர் விட்டலாச்சார்யா குரெல்லா (86). சிறுவயது முதலே புத்தக விரும்பியான இவர், தெலுங்கு ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். கல்லூரி முதல்வராக கடந்த 1993-ல்ஓய்வு பெற்றார்.

இவர் தனது பணிக்காலத்தில் நிறைய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில் 2014-ல் எல்லங்கியில் உள்ளதனது வீட்டை நூலகமாக மாற்றினார். தொடக்கத்தில் அதில் 5 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. குரெல்லா தனது நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும்படி நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளை கேட்டுக்கொண்டார்.

இதனால் நூலகத்திற்கு புத்தகங்கள் சேரத் தொடங்கின. தற்போது இங்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதற்காக தனது வீட்டில் கூடுதலாக ஒரு தளத்தையும் கட்டியுள்ளார் குரெல்லா.

மாநிலம் முழுவதிலும் இருந்து புத்தக விரும்பிகள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த நூலகத்திற்கு வருகின்றனர். உஸ்மானியா பல்கலைக்கழகம், காக்காத்தியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஆய்வு மாணவர்களையும் இந்த நூலகம் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து குரெல்லா கூறும்போது, “எனது நூலகத்தில் சேகரித்த தகவல்கள் மூலம் 8 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எனது பணிகள் குறித்தும் சிலர் ஆய்வு மேற்கொள்கின்றனர்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி2 ஆண்டுகளுக்கு முன் மனதின்குரல் நிகழ்ச்சியில் குரெல்லாவைபாராட்டியுள்ளார். இந்நிலையில்விட்டாலாச்சார்யா குரெல்லாவுக்குபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குரெல்லா கூறும்போது, “இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலங்கானாவுக்கும் கிடைத்த பெருமை. மக்களின்வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்க இது ஊக்கமளிக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x