

ஹைதராபாத்: தெலங்கானாவில் விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) ஹைதராபாத் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு வெளியிட்ட தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், சட்டப் பேரவைத் தேர்தலின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர, தெலங்கானாவில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் குருகுலப் பள்ளிகளின் முழு விவரங்களையும் அளிக்குமாறும், வாடகைக்குப் பதில் நிரந்தர குருகுல கட்டிடங்களுக்கான முன்மொழிவுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குருகுல கல்வி நிறுவனங்களையும் வெவ்வேறு இடங்களில் அமைக்காமல் ஒருங்கிணைந்த கல்வி மையமாக அமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மகாத்மா ஜோதிபாபுலே வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துமாறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் பயனைப் பெறுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.