

இண்டியா கூட்டணி குறித்து கார்கே கருத்து: பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
“நிதிஷ் குமாரிடம் பேச கார்கே பலமுறை முயன்றார்" - காங்.,: "நிதிஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயன்றார். ஆனால் நிதீஷ் குமார் பிஸியாக இருந்தார். அதே சமயம் நிதிஷ் குமார் அழைத்தபோது, மல்லிகார்ஜுன கார்கே சில கூட்டங்களில் இருந்தார்" என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 தொகுதி - அகிலேஷ் அறிவிப்பு: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “காங்கிரஸ் உடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலிமையான தொகுதிகளுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது. வெற்றி சமன்பாட்டுடன் எங்கள் கூட்டணி முன்னேறும். இண்டியா கூட்டணியின் வியூகம் வரலாற்றை மாற்றும்” என தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தொடர்கதையாகி வருகிறது”: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே நாள்தோறும் செய்தித் தாள்களில் அதிகம் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை சட்டம்-ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பியதுதான் என்றும், இதில் இருந்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே கர்நாடகத்தை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகள் பவதாரிணி உடலுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி: இசையமைப்பாளர் இளையராஜா, தனது மகளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னணி பாடகரான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பவதாரிணியின் உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பதவாரிணியின் உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மகளின் உடலுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பு: சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ (SFI) உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஆரிப் கான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் கட்சியின் எஸ்எப்ஐ (SFI) அமைப்பினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றது ஷிண்டே அரசு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டதால் சமூக நல செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் தனது உண்ணாவிரத போராட்டத்தை சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மனோஜ் பாட்டீலை சந்தித்து பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதனிடையே மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகளை மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே அரசு ஏற்றுக்கொண்டிருப்பதற்கு கூட்டணிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் இந்த முடிவு வெறும் கண்துடைப்பு என்று கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் சாகன் புஜ்பால் விமர்சித்துள்ளார்.
பாஜக மீது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
கவுதமாலாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. “இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் பதிவாகவில்லை. அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்" என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ரோடோல்போ கார்சியா தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கவுதமாலாவின் 90 சதவீத பகுதிகள் பூகம்பத்திற்கு ஆளாகின்றன என கூறப்படுகிறது.