Last Updated : 27 Jan, 2024 04:47 PM

5  

Published : 27 Jan 2024 04:47 PM
Last Updated : 27 Jan 2024 04:47 PM

யூ-டர்ன் போட்டு பாஜகவுடன் கைகோக்கும் நிதிஷ்! - நம்பி ஏமாந்ததா ‘இண்டியா’ கூட்டணி?

பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கை கோர்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. அதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. இவரது அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்துக் களம் காண இருப்பதாக, அக்கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மன் அறிவித்தார். தற்போது, பிஹார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரும், ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கை கோர்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளதால், வரும் ஞாயிறு, பாஜகவுடனான புதிய கூட்டணியுடன் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் பொறுப்பேற்பார் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.

எப்போது தொடங்கியது அதிருப்தி? தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி முரண்டுபிடிப்பதாக, மம்தாவும், அரவிந்த் கேஜ்ரிவாலும் ஏற்கனவே குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது நிதிஷ்குமாரும், ‘‘தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் பெரிய மனதை வெளிப்படுத்த வேண்டும்,” எனக் கூறினார். அப்போதே அவரது அதிருப்தி வெளிப்பட்டது.

கடந்த 13-ம் தேதி, ‘இண்டியா’ கூட்டணி சார்பாகக் கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டணியின் ஒருங்கிணைபாளர் பொறுப்பை நிதிஷ் குமாருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதனை நிதிஷ்குமார் மறுத்துவிட்டார். இதனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில், ‘இண்டியா’ கூட்டணியில், கடைசியாக நடந்த காணொலி கூட்டத்தில், நிதிஷ்குமாரை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முனைந்த சோனியா காந்தியின் முடிவுக்கு, மறுப்புத் தெரிவித்திருக்கிறார் ராகுல். ‘அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கலாம்’ எனவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் தான் மல்லிகார்ஜுனா கார்கேவுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனக்குப் பொறுப்பு வழங்கப்படாததால் நிதிஷ்குமார் அதிருப்தியடைந்தார். மேலும், ‘கூட்டணியை வலுப்படுத்த, தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச வேண்டும். எனவே, ஜோடோ யாத்திரைத் தொடங்க வேண்டாம்’ என, நிதிஷ்குமார் கூறியுள்ளார். ஆனால், அதற்குச் செவிமடுக்காத ராகுல், யாத்திரையைத் தொடர்ந்தார். இதனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. இதுவும், ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேறியதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

மாநிலத்தில் கூட்டணி முறிவு ஏன்? பிஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தே ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இரு கட்சிகளிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

குறிப்பாக, ராஷ்டிர ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நிதிஷ்குமாருடன் கலந்தாலோசிக்காமல் தாங்களாகவே முடிவு எடுப்பது, நிதிஷ் குமாருக்குக் கோபத்தைத் தூண்டியுள்ளது.

மேலும், தேஜஸ்வி யாதவின் சகோதரி ரோகினி யாதவ், சமூக வலைத்தளத்தில் நிதிஷ் குமாரை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு வலுக்கவே அப்பதிவை நீக்கினார். இதுவும், மாநிலக் கூட்டணியைக் கைவிடும் எண்ணத்திற்கு நிதிஷ்குமாரை உந்தியுள்ளது.
இப்படி, ‘இண்டியா’ கூட்டணியில் அதிருப்தி, மாநிலக் கூட்டணி கட்சியுடன் மோதல் என்ற இரு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக... பாஜவுடன் கூட்டணி கை கோர்க்கும் முடிவை எட்டியுள்ளார் நிதிஷ்குமார்.

கூட்டணி முறிவும்... நிதிஷ்குமாரும்! - ‘கூட்டணி முறிவு’ என்னும் சொல், நிதிஷ்குமாருக்குப் புதிதல்ல. கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கி, 8 முறை, பிஹாரின் முதலமைச்சராக இருந்திருக்கிறார் நிதிஷ்குமார். அப்போதெல்லாம் பல முறை, ‘கூட்டணி முறிவு’ என்னும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு ‘பல்டி அடிப்பவர்’ என்பதைக் குறிக்கும், ‘பல்டு ராம்’ (paltu ram) என்ற அடைமொழியும் உண்டு.

குறிப்பாக, கடந்த 2010-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஐக்கிய ஜனதா தளம். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ கட்சியின் வேட்பாளராக, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதில் உடன்பாடு இல்லாத நிதிஷ்குமார், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலை, காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளக் கட்சிகளுடன் இணைந்து சந்தித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சரானார். அப்போது, ராஷ்டிர ஜனதா தளக் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு ராஷ்டிர ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்தது. அதில், தேஜஸ்வி யாதவ் பெயரும் இணைக்கப் பட்டிருந்ததால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார் நிதிஷ் குமார். ஆனால், தேஜஸ்வி அதை மறுக்கவே, கூட்டணியைக் கலைத்துவிட்டு, மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதலமைச்சராகவே தொடர்ந்தார் நிதிஷ்.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலைப் பாஜக கூட்டணியுடன் சந்தித்து வெற்றிப் பெற்றார். ஆனால், பாஜக அரசு அறிமுகம் செய்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் நிதிஷ்குமார். மேலும், பாஜக நியமித்த துணை முதல்வர்களுக்கும் இவருக்கும் பனிப் போர் நடந்தது. எனவே, கூட்டணிவிட்டு வெளியேறி ராஷ்டிர ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.

தற்போது பிஹாரிலுள்ள 243 தொகுதிகளில், ராஷ்டிர ஜனதா தளம் 75 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், பாஜக 74 இடங்களையும் வென்றுள்ளன. அதிக தொகுதிகளை வைத்துள்ள பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைத் தக்கவைத்து மீண்டும் முதல்வராக தொடர நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார்.

2010-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி வென்ற இடங்கள் 115, 2015-ம் ஆண்டு 71 -ஆக குறைந்தது. 2020-ம் ஆண்டு வெறும் 43-ஆக உள்ளது. இருப்பினும் நிதிஷ்குமார் தான் பிஹாரின் முதல்வராகத் தொடர்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாடுமுழுதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, சக்தி மிக்க கூட்டணி அமைத்து, தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தத் திட்டமிட்டன. இதற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர் நிதிஷ் குமார் தான். பிஹாரில் தான் ‘இண்டியா’ கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. அதற்கு நிதிஷ் குமார் தலைமை தாங்கினார். ஆனால் அவர் ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது நகை முரணே.

பாஜக எண்ணம் என்ன? - அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணியைக் கலைத்திருக்கும் நிதிஷ்குமாரை நம்பி, மீண்டும் அவருடன் கை கோர்க்க பாஜக மாநில நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. கடந்த, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்து, பிஹாரில் உள்ள 40-ல் 39 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க எண்ணும் பாஜகவுக்கு, 40 இடங்கள் என்பது, மிக முக்கியமானது. இதனால், இந்தக் கூட்டணிக்கு ‘கீரின் சிக்னல்’ கொடுத்திருக்கிறது பாஜக.

பல்டி ராமை (நிதிஷ்குமாரை) நம்பிய இண்டியா கூட்டணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா? அல்லது பிஹாரில், அதிக சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ள ராஷ்டிர ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியுடன் களம்காணுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x