Published : 26 Jan 2024 04:35 AM
Last Updated : 26 Jan 2024 04:35 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட உள்ள பிரதமர் மோடி, நேற்று உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
புதிய குர்ஜா - புதிய ரேவாரி இடையிலான 173 கி.மீ. தூர சரக்கு ரயில் பாதையில் இருவழி மின்சார கட்டமைப்பை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், மதுரா - பல்வால் மற்றும் சிபியானா புஜுர்க் - தாத்ரியை இணைக்கும் ரயில் பாதையையும் தொடங்கி வைத்தார்.
இதுதவிர பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துண்ட்லா - கவாரியா பைப்லைன் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனதுமக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
புலந்த்சாகர் பகுதிதான் நமக்குகல்யாண் சிங்கை (உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்) வழங்கியது. அயோத்தியில் ராமர் கோயில் அமைவதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
தற்போது அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது. அடுத்தபடியாக நம் நாட்டை புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது.
நாட்டு மக்களுக்கு நான் நேர்மையாக சேவை செய்கிறேன். அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 25 கோடி மக்கள்வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். மற்றவர்களும் வறுமையில் இருந்து விரைவில் விடுபடுவோம் என்று நம்புகிறார்கள். நாட்டு மக்களாகிய நீங்கள்தான் என் குடும்பம். உங்கள் கனவை நிறைவேற்றுவதுதான் என் கடமை. எங்கள் அரசு என்ன சொன்னதோ அதை செய்துள்ளது. நலத்திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது. அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்தாலே, பாகுபாடு, ஊழலுக்கு இடம் இருக்காது.
பரவலாக்கப்படும் வளர்ச்சி: சுதந்திரத்துக்கு பிறகு வளர்ச்சி திட்டங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருந்தது. பெரும்பாலான பகுதிகள் வஞ்சிக்கப்பட்டிருந்தன. பாஜக ஆட்சிக்குவந்த பிறகு, வளர்ச்சி திட்டங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, முந்தைய ஆட்சியாளர்களால் உத்தர பிரதேசம் பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் என இரட்டை இன்ஜின் பாஜக அரசால் உத்தர பிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக, சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் அழைப்பு: தேசிய வாக்காளர் தினம் நேற்று (ஜன.25) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், ‘நமது துடிப்பான ஜனநாயகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளர் பட்டியலில் இணையாதவர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பாஜக இளைஞர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய 25 ஆண்டுகளில் சுதந்திரத்துக்காக இளைஞர்கள் பாடுபட்டனர். அதுபோல, அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் சூழலில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. அதற்கு அவர்கள் பாடுபட வேண்டும்.
இன்றைய இளைஞர்கள், ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிரானவர்கள். மக்களவை தேர்தலின்போது, குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகளை இளைஞர்கள் தங்கள் வாக்குகள் மூலம் தோற்கடிக்க வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க இளைஞர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT