குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 24,000 பேர் மனித சங்கிலி அமைத்து அதிபர் மேக்ரானை வரவேற்றனர்.

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வரவேற்க பிரதமர் மோடி முடிவு செய்தார்.

இதையடுத்து அதிபர் மேக்ரான் நேற்று மாலை ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தடைந்தார். அதிபர் மேக்ரானையும், பிரதமர் மோடியையும் வரவேற்க, ராஜஸ்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 24,000 பேர் சாலையில் அணிவகுத்து நின்றனர். மனித சங்கிலி அமைத்தும் இரு நாட்டு கொடிகளை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட அதிபர் மேக்ரான் அங்கு நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி, உள்ளூர் கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து வியந்தார்.

பின்னர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை, பிரதமர் மோடி வரவேற்றார். அங்கு பழங்கால இந்தியர்களின் வானியல் ஆய்வகத்தை மேக்ரான் பார்வையிட்டார். ஜந்தர் மந்தரில் இருந்து சங்கநேரி கேட் வரை மேக்ரானும் பிரதமர் மோடியும் காரில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஏராளமான மக்கள் கூடிநின்று உற்சாக வரவேற்புஅளித்தனர். வழியில் இருவரும்ஹவா மஹாலை பார்வையிட்டனர். அங்கு இருவரும் உள்ளூர் கடையில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி சில பொருட்களை வாங்கினர். பின்னர் இருவரும் ராம்பாக் பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றனர்.

பிரான்ஸிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா-பிரான்ஸ் இடையே நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தையில், இது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in