

திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் 4,200 ஏக்கர் அசையா சொத்துகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தவிர்த்து பிற மாநில பக்தர்கள், ஏழுமலையானுக்கு வீடு, நிலம் போன்றவற்றை வழங்கினால், பக்தர்கள் மீது கூடுதலாக பத்திரப் பதிவு செலவு ஏற்படுகிறது. இதனை தேவஸ்தானம் ஏற்க வேண்டும் அல்லது இதற்கு விலக்கு அளிக்க ஆந்திர அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஏழுமலையானை நாள்தோறும் சுமார் 45 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. ஏழுமலையானின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடியாகும்.
தங்கம், வைரம், வெள்ளி, பணம் என பல வகைகளில் பக்தர்கள் காணிக்கை அளித்துவருகின்றனர். 2009-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தேவஸ்தானம் தெரிவித்த கணக்குப்படி, ரூ.12,000 கோடி மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.11,000 கோடி மதிப்பிலான வைர, வைடூரிய, வெள்ளி ஆபரணங்களும் உள்ளன. இதில் சில கற்களின் மதிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50,000 கோடி எனக் கூறப்படுகிறது.
இது தவிர, ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் அசையா சொத்துகள் உள்ளன. இதில் கோயில்கள் தவிர, பக்தர்கள் காணிக்கையாக அளித்த சொத்துகளும் அடங்கும். ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, மும்பை என முக்கிய நகரங்களிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4,200 ஏக்கர் அசையா சொத்துகள் ஏழுமலையானுக்கு உள்ளன. இவற்றின் அரசு மதிப்பு ரூ.32,500 கோடி என கடந்த 2009-ல் தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இவற்றின் சந்தை மதிப்பு அப்போதே ரூ.90,000 கோடி. இப்போது மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் நிலம், வீடு போன்றவற்றுக்கு 2008 வரை பக்தர்களே பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தி வந்தனர். 2008 ஆகஸ்ட் மாதம், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர அரசு, ஆந்திர மாநிலத்தில் தானமாக வழங்கும் நிலம், வீடு, வீட்டுமனை போன்றவற்றுக்கு பக்தர்கள் ரூ.100 மட்டும் பத்திரப்பதிவு கட்டணமாக செலுத்தினால் போதும் என அறிவித்தது.
2012 ஆகஸ்ட் முதல், சொத்தின் மதிப்பில் சந்தை நிலவரப்படி, 0.5 சதவீதம் பக்தர்கள் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. இப்போது ஆந்திரம், தெலங்கானா பக்தர்களுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உள்ளது. மற்ற மாநில பக்தர்கள் தங்களது நன்கொடை நிலத்துக்கு அவர்களே பத்திரப்பதிவு கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டி உள்ளது.
சமீபத்தில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கினார். இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த மதிப்பான ரூ.1.88 கோடிக்கு ரூ.17 லட்சம் பத்திரப்பதிவு கட்டண செலவையும் ஏற்று ஏழுமலையானுக்கு இடத்தை வழங்கினார்.
இப்போது அந்த பக்தர், ரூ.10 கோடி மதிப்புள்ள இரண்டு இடங்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக தர முன்வந்துள்ளார். பத்திரப் பதிவு கட்டணத்தை வேறு பக்தர்களோ, தேவஸ்தானமோ ஏற்றுக் கொண்டால் இதனை உடனடியாக வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் அசையா சொத்துகளை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க தயாராக உள்ளனர். ஆனால், பத்திரப்பதிவு கட்டணம் பெருமளவு உயர்ந்து விட்டதால் அந்த செலவை திருப்பதி தேவஸ்தானம் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், ஆந்திர அரசு இதற்கு விதிவிலக்கு அளித்து முழு பத்திரப்பதிவு கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.