‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ - அதிருப்தியால் இளம்பெண் விவாகரத்து கோரிய சம்பவம்

‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ - அதிருப்தியால் இளம்பெண் விவாகரத்து கோரிய சம்பவம்
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் குடும்ப நல நீதிமன்றத்தில், ஜனவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்து மனு ஒன்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை. தேனிலவுக்கு கோவா அழைத்துச் செல்வதாய் உறுதி அளித்த கணவர் வாக்குத் தவறி அயோத்திக்கு அழைத்துச் சென்றதால், விவாகரத்துக் கோரி இளம் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்.

இது குறித்து உறவுகள் நல ஆலோசகர் ஷாலி அவஸ்தி கூறுகையில், "அந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் திருமணமாகியுள்ளது. கணவர் தகவல் தொழில்நுட்ப பொறியளராக பணியாற்றுகிறார். அந்தப் பெண்ணும் நல்ல வேலையில் உள்ளார். பெண் தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு கணவரோ தனது வயாதான பெற்றோரின் விருப்பப்படி, இந்தியாவில் உள்ள ஆன்மிக நகரத்துக்குச் செல்லலாம் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதியாக இருவரும் கோவா செல்வது என முடிவெடுத்தனர்.

ஆனால், கணவரோ அவரது அம்மாவின் விருப்பப்படி, அயோத்தி, வாரணாசிக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். அதை மனைவியிடம் பயணத்துக்கு முதல் நாள் வரை சொல்லவும் இல்லை. திட்டமிட்ட பிடி அத்தம்பதியினர் அயோத்திக்கு சென்றனர். என்றாலும் பயணம் முடிந்து வந்து அப்பெண் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்" என்றார்.

அவஸ்தி மேலும் கூறும்போது, "கணவர் தன்னுடைய நம்பிக்கையை உடைத்துவிட்டதாக கூறிய அப்பெண், திருமணமான நாளிலிருந்தே கணவர் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்" என்றார். தற்போது தம்பதியினர் போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in