Published : 25 Jan 2024 02:58 PM
Last Updated : 25 Jan 2024 02:58 PM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸில் இணைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், வியாழக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் அங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜகவில் அவரிருந்த போது இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். என்றாலும் 2023 தேர்தலில் பாஜகவின் மகேஷ் தெங்கினாகையிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்சி ஆனார்.
இந்தநிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இன்னும் சில மாதங்களில் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக அரசியலில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கட்சியில் இணைந்து குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், "கடந்த காலங்களில் கட்சி எனக்கு பல பொறுப்புகளை கொடுத்துள்ளது. சில பிரச்சினைகள் காரணமாக நான் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தேன். கடந்த 8 - 9 மாதங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்தன, பாஜகவினர் மீண்டும் என்னைக் கட்சிக்கு வருமாறு அழைத்தனர். எடியூரப்பாவும், விஜயேந்திராவும் நான் மீண்டும் பாஜகவுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன்" என்று கூறினார்.
இதனிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இண்டியா கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்திலும், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதன்கிழமை அறிவித்தன. இந்தப் பின்னடைவு காரணமாக தத்தளித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்திருப்பது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஜெகதீஷ் ஷெட்டர்: ஆறு முறை எம்எல்ஏவாக இருந்துள்ள 67 வயதாகும் ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த 2012 - 13 ஆண்டுகளில் பத்து மாதங்கள் கர்நாடகாவின் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெகதீஷ், கர்நாடக பாஜகவில் மாநில தலைவர், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். லிங்காயத் சமூகத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவரான இவர், கர்நாடக அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அதே போல், கடந்த 2008 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT