Last Updated : 07 Feb, 2018 08:43 AM

 

Published : 07 Feb 2018 08:43 AM
Last Updated : 07 Feb 2018 08:43 AM

பாவம் நடுத்தர மக்கள்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது...

கௌ

பாய் படங்களில் எங்கு கொள்ளை நடந்தாலும் உடனே ``சந்தேகப் பட்டியலில் உள்ள முன்னாள் கொள்ளையர்களைப் பிடித்து வாருங்கள்.. விசாரிப்போம்..'' என்பார் போலீஸ் அதிகாரி. அதுபோல்தான் இருக்கிறது மத்திய அரசின் செயலும். அவர்களுக்கு எப்போதெல்லாம் வரி அதிகமாகத் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நடுத்தர மக்களைப் பிழிவது வழக்கமாகிவிட்டது.

தனது ஊதாரித்தனத்தாலோ அல்லது வாக்காளர்களுக்கு இலவசங்களை வாரி இறைப்பதற்கோ தேவையான பணம் எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போதெல்லாம் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம்தான் அரசின் கண்ணுக்குத் தெரியும். அவர்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கழுத்தை நெரிக்கலாம். அவர்களுக்கென குரல் கொடுக்க ஆளில்லை. தனி அடையாளமும் இல்லை. தனித் தொகுதியும் இல்லை. கழுத்தைப் பிடியுங்கள், பின்புறம் உதையுங்கள்.. பணம் கொட்டும். இதனால் அரசியல்ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வலி தாங்க முடியாமல் அவர்கள் புலம்பினாலும் அது நல்லதுதான். ஏழைகளுக்கு அது சந்தோஷத்தைத் தரும். இதை 'பணமதிப்பு நீக்க அரசியல்' எனக் கூறலாம். தடாலடியாக ஏதாவது செய்யும்போது, ஏழைகளும் அதனால் பாதிக்கப்பட்டால், ``கொஞ்சம் பொறுத்துக்கோ... அங்கே பார்த்தாயா.. அந்தப் பணக்காரர்கள் என்ன பாடுபடுகிறார்கள்..'' என ஏழைகளிடம் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் பணக்காரர்களுக்கு பாதிப்பே இல்லை. ஏழைகள்தான் கஷ்டப்பட்டார்கள்.

பட்ஜெட் தாக்கல் செய்ததும் பங்குச்சந்தை சரிவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே ப. சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோதும் சரிந்துள்ளது. வங்கி பணப்பரிமாற்றம், பங்கு விற்பனைக்கு வரி விதிப்பு, ஊழியர்களுக்குப் பங்கு ஒதுக்கீட்டில் மாற்றம் போன்றவை அறிவிக்கப்பட்டபோதும் இதேபோல் சரிந்துள்ளது. ஆனால் இந்த முறை நடுத்தர மக்களின் சேமிப்பு மீது பெரும் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசு விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதி முதலீடுகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதால், நடுத்தர மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள், வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

`பிசினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையின் தலைவர் டி.என்.நினன், பொருளாதார நிபுணர். கடந்த ஜனவரி 6-ம் தேதி ஒரு டிவியில் பேசியபோது, “நீண்டகால மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்” என வாதிட்டார். நிதியமைச்சர் ஜேட்லி, இந்த யோசனை அருமையாக இருக்கிறதே என நினைத்து அதை பட்ஜெட்டில் அமல் செய்துவிட்டார். இதை வேறு கோணத்தில் நான் பார்க்கிறேன்.

முதல் கேள்வி: ஓர் அரசு தனது தேர்தல் அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வரி விதிக்கலாமா? பணமதிப்பு நீக்கம் போன்ற மோசமான யோசனையால், வேலை இழப்போடு, சிறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. ஒரு முழு ஆண்டின் உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 2 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டது.

பணப் புழக்கத்தைக் குறைத்து, எல்லோரையும் வங்கி மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வைப்பதும், அதன் மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதும்தான் அரசின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னும் எந்தப் பலனும் ஏற்படவில்லையே?

பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் மூலமான வருமானத்துக்கு வரி விதித்து வருமானத்தைப் பெருக்க திட்டமிடுகிறீர்கள். பல லட்சக்கணக்கானோரை வரி செலுத்துவோர் பட்டியலில் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் பொய்க்கப்போகிறது. இதனால், மீண்டும் வழக்கம்போல, நடுத்தர மக்களுக்கு மேலும் வரி விதிக்கத்தான் போகிறீர்கள்.

அடுத்த கேள்வி: நடுத்தர மக்களுக்கெனத் தனியாகக் குரல் கொடுக்க யாருமில்லை என்பதாலும் அவர்களுக்குத் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தி இல்லாததாலும்தான் அனைத்து அரசுகளும் அவர்களை மோசமாக நடத்துகின்றன. அரசியலுக்கு வேண்டுமானால் இந்த பட்ஜெட் சாதகமானதாக இருக்கலாம். செல்வம் கொட்டப்போகிறது என ஏழைகளை நம்ப வைப்பீர்கள். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஏகப்பட்ட கோடிகளை ஒதுக்குவீர்கள். ஏனெனில் அவர்களிடம் ஓட்டு இருக்கிறது. ஆனால் கூட்டம் கூட்டமாக உங்களுக்கு ஓட்டுப் போட்ட நடுத்தர மக்களுக்கு என்ன வைத்திருக்கிறீர்கள்? யோகா, பசு பாதுகாப்பு, முத்தலாக்கில் தொடங்கி லவ் ஜிகாத், ஹஜ் மானியம் போன்ற முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற விஷயங்களைத்தான் வைத்திருக்கிறீர்கள்.

எல்லா விவாதங்களிலும் இந்தியர்களில் வெறும் 2.56 சதவீதம் பேர் தான் வரி செலுத்துகிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரிவிக்கப்படுகிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், அதில் பெரும்பாலும் நடுத்தர மக்கள் இருக்கும்போது, இவ்வளவு பேர் தானா வரி கட்டுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். இதையே மாற்றி யோசியுங்கள். வெறும் 2.56 சதவீதம் பேர் தான் அரசின் 100 சதவீத வருமான வரியைச் செலுத்தி வருகிறார்கள் என்றால் அது இன்னும் ஆச்சரியத்தைக் கொடுக்கும். வரி ஏமாற்றுபவர்களைப் பிடித்து, அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை மீட்க முடியாமல், நடுத்தர மக்களையே போட்டுத் தாக்குவது என்ன நியாயம்?

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எப்படித்தான் சேமிப்பார்கள். வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கடன் வட்டி குறையாததால், மாதாமாதம் செலுத்தும் இஎம்ஐ குறையவில்லை. பேராசை பிடித்த வங்கிகளும் கடன் வாங்கி ஏமாற்றிய பெரும் தொழிலதிபர்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, நடுத்தர மக்களின் டெபாசிட் மீதும், கடன்கள் மீதும் கைவைக்கின்றன. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடனுக்கும் அதிக வட்டி வசூலிக்கின்றன.

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் நகரங்களில்தான் அதிகம் இருக்கிறது. அவர்கள் அனைவருமே பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள். குஜராத் தேர்தல் அதற்கு உதாரணம். கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அதில் இருந்து கிடைக்கும் அதிக வரியை மட்டும் எடுத்துக் கொண்டபோதும், அவர்களின் விசுவாசம் மாறவில்லை. ஆனால், அவர்களின் சேமிப்பு மீது இப்போது விழுந்த இந்த அடி மிக ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ். ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x