தடுமாறும் ‘இண்டியா’ கூட்டணி முதல் அரசு Vs ஆம்னி பஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.24, 2024

தடுமாறும் ‘இண்டியா’ கூட்டணி முதல் அரசு Vs ஆம்னி பஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.24, 2024
Updated on
3 min read

மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி: மம்தா அறிவிப்பு: மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி வந்தேன். மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் காங்கிரஸுக்குக் கொடுத்த அனைத்து யோசனைகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்தே மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை” எனக் காத்திரமாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் மோதல் போக்கு, தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் ஆகியவையே மம்தாவின் இந்த முடிவுக்கு காரணம். மம்தாவின் இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

‘பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி’: மம்தாவைத் தொடர்ந்து, வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மம்தா முடிவு - காங்கிரஸ் விளக்கம்: “இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என்ற மம்தாவின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள ஜெய்ராம், “நீங்கள் எல்லோரும் மம்தா பானர்ஜியின் கருத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்று மம்தா கூறியுள்ளார்.

இண்டியா கூட்டணியை அவர் புறக்கணிக்கவில்லை. இண்டியா கூட்டணியை மம்தா இல்லாமல் யோசிக்க முடியவில்லை. இந்தக் கூட்டணி மேற்கு வங்கத்திலும் ஒரே அணியாக போட்டியிடும். அதில் எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பலன் தரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “மம்தா பானர்ஜி எங்களுடைய அக்கா. நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் இண்டியா கூட்டணி தடுமாறி வரும் நிலையில், சுமுகத் தீர்வுக்கு காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.

அசாம் முதல்வர் மீது ராகுல் காந்தி விமர்சனம்: அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் ஒரு கைப்பாவையாக இருப்பதாகவும், அமித் ஷாவுக்கு எதிராக ஏதாவது பேசினால், அடுத்த நிமிடமே பிஸ்வா கட்சியில், முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் தன் மீதும், கட்சியினர் மீதும் அசாம் போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில், அசாம் முதல்வரை ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

“சாதி, மத வேறுபாடுகள் ஒற்றுமையை சிதைக்க உருவாக்கப்பட்டவை”: மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை புதன்கிழமை திறந்து வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் “சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம்” என்று பேசினார்.

ஜன.27-ல் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: தமிழக காங்கிரஸ்: “மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கொந்தளிப்பு: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே-தான் இருப்பதாக கூறுகின்றனர். 1,000 ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம்? நாங்கள் இதைத்தான் சிஎம்டிஏ நிர்வாகத்திடம் கடந்த 3 மாதங்களாக நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் எங்கே இருக்கிறது?” என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். கோயம்பேட்டில் இருந்து உடனடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாறுவது இல்லை என்ற முடிவில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்த விவகாரத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது

கோயம்பேட்டில் ஆம்னி பஸ் இயக்க அரசு தடை!: அதேவேளையில், ‘புதன்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்’ என்று அரசு தரப்பில் அமைச்சர் சேகர்பாபு உறுதிபட கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: ‘பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய விவகாரத்தில்திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதனிடையே, திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில், சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் போர்க் கைதிகளுடன் ரஷ்ய விமானம் விபத்து: உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in