Published : 15 Feb 2018 08:22 AM
Last Updated : 15 Feb 2018 08:22 AM

திரிபுராவில் தனி நாடு கோரி வரும் பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: முதல்வர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு

திரிபுராவில் பிரிவினைவாத கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசியதாவது:

நாடு முழுவதிலும் பாஜக அமைதியை சீர்குலைத்து வருகிறது. திரிபுராவில் ஐபிஎப்டி (திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி) கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இது புனிதமற்ற கூட்டணி. தனி நாடு கோரும் ஐபிஎப்டி-ஐ பாஜக ஆதரிக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து திரிபுராவை வரலாற்றில் இருந்து அழித்துவிட சதி செய்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘மக்களுக்கு நல்ல நாள் வரும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

நம் நாட்டின் விலைவாசி விகிதம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உலகின் பிற நாடுகளை விட அதிகமாக உள்ளது. 2014 தேர்தலின்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக பணம் பெற்றுக்கொண்டது. எனவே அவர்களுக்காக பாஜக அரசு உழைத்து வருகிறது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. தனியார் லாபம் ஈட்டவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 2019-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதேநிலைதான் நீடிக்கும். இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

திரிபுராவில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக அக்கட்சிஆட்சியில் உள்ளது.- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x