Published : 24 Jan 2024 05:50 AM
Last Updated : 24 Jan 2024 05:50 AM

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியைப் போலவே 11 நாள் விரதம் இருந்த பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி செய்ததைப் போலவே, ராமர் கோயில் திறப்பையொட்டி 11 நாள் கடும் விரதம் இருந்தார் பிரதமர் மோடி என்று ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பையொட்டி 11 நாள் கடும் விரதத்தை பிரதமர் மோடி கடைப்பிடித்தார். பசுக்களுக்கு உணவளித்தும், கட்டாந்தரையில் படுத்து உறங்கியும் தினந்தோறும் அவர் கடுமையான விரதத்தை கடைப்பிடித்தார். விரதம் முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

இந்த விரதம் குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது:

அயோத்தியில் ராமர் சிலையை நிறுவுவது வெறும் சடங்கை விட ஆழமான அர்த்தம் கொண்டது. இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி 'தீவிர தவம்' செய்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். சுமார் 20 நாட்களுக்கு முன்பு, விழாவுக்குத் தன்னைத் தயார்படுத்த பிரதமர் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியலையும் நடத்தை நெறிமுறையையும் வழங்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது. அப்போது நான் ஆச்சரியப்பட்டேன்.

நாங்கள் துறவிகளுடன் கலந்தாலோசித்து, மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்குமாறு பிரதமருக்கு அறிவுறுத்தினோம். ஆனால், பிரதமர் 11 நாட்கள் முழுவதும் உபவாசம் இருந்து (தானிய உணவை உட்கொள்ளாமல் இருத்தல்) கடைப்பிடித்தார்.

மேலும், நாசிக், குருவாயூர் கோவில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற நேர்மறையான இடங்களுக்கு பிரதமர் தானே பயணம் செய்தார். கடந்த 11 நாட்களாக மிகவும் குளிரான காலநிலையையும் மீறி அவர் இதைப் பின்பற்றினார்.

அவரது கடும் விரதம், மராட்டிய மாமன்னர் சிவாஜி மகராஜ் கடைப்பிடித்தது போன்றதாகும். மக்களுக்காக சிந்தித்தவர் சத்ரபதி சிவாஜி. கடந்த பல வருடங்களில் ஒரே மாதிரியான குணம் கொண்ட எந்த தலைவரையும் அல்லது அரசரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அப்படி நினைத்துப் பார்த்தால் சிவனை வழிபட்ட மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜின் பெயர் மட்டுமே என் நினைவுக்கு வருகிறது. மக்களுக்குச் சேவை செய்வதே இறைவனை வழிபடுவதற்கான வழி என்றும் சத்ரபதி சிவாஜி வலியுறுத்தினார். அதேபோல், நமது பிரதமர் இமயமலையிலிருந்து துர்கா தேவியால் பாரத மாதாவுக்குச் சேவை செய்ய அனுப்பப்பட்டார்.

இவ்வாறு ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x