அலிகரில் ஜனவரி 22-ல் பிறந்த 135 குழந்தைகள்: ராமர், சீதை பெயர்களை வைத்து மகிழ்ந்த பெற்றோர்

அலிகரில் ஜனவரி 22-ல் பிறந்த 135 குழந்தைகள்: ராமர், சீதை பெயர்களை வைத்து மகிழ்ந்த பெற்றோர்
Updated on
2 min read

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயிலின் தாக்கம் பல பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது. இது, டெல்லிக்கு மிக அருகில் அமைந்துள்ள உ.பி.யின் முக்கிய நகரமாக அலிகரில் வித்தியாசமானதாக உள்ளது.

இங்கு ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளான ஜனவரி 22-ல் இந்து குடும்பங்களில் மட்டும் 135 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளில் ஆண்களுக்கு ராம், ராம்குமார், ராமேஷ்வர், ரகுராம், ரகுநந்தன் என ராமர் பெயரை அடிப்படையாக வைத்து பெயர்கள் வைக்கப்பட்டன.

அதேபோல், பெண் குழந்தைகளுக்கு ராமரின் மனைவியான சீதா பெயரின் அடிப்படையில், சீதாமா, சீதா தேவி என்ற வகையில் பெயரிட்டு அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் குழந்தையின் பெற்றோர்களில் ஒருவரான குல்தீப்சிங் கூறும்போது, ‘‘குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் ராமபக்தர்கள். இதன் காரணமாக அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகி உள்ளது. இதில் அறுவை சிகிச்சையால் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களில் பலரும் ஜனவரி 22-ல் பெற்றெடுக்க வேண்டி மருத்துவமனைகளில் முன்கூட்டியே நேரம் கேட்டிருந்தவர்கள் எனக் கேள்விப்பட்டோம்’’ என்றார்.

இதுபோல், அயோத்தியில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நேரமான நண்பகல் 12.30 மணிக்கு மேல் அறுவை சிகிச்சைகள் துவங்கின. அலிகரின் அருகிலுள்ள நகரமான பெரோஸாபாத்தில் 56 குழந்தைகள் ஜனவரி 22-ல் பிறந்தன. முஸ்லிம்களுக்கும் எதிர்பார்ப்புகள் இன்றி இதே நாளில் குழந்தைகள் பிறந்தன. இவர்களில் பெரோஸாபாத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான பர்ஸானா தனது குழந்தைக்கு ராம் ரஹீம் எனப் பெயரிட்டுள்ளார். ஆக்ரா மற்றும் சில முக்கிய நகரங்களிலும் இதே நிலை காணப்பட்டது.

திடீர் திருமணங்கள்: அதேபோல், ஜனவரி 22 தேதியை திடீர் எனக் குறிப்பிட்டு பலர் தங்கள் திருமணங்களை நடத்தி முடித்துள்ளனர். இந்த வகை திருமணங்கள் டெல்லியில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமாக நடைபெற்றுள்ளன.

கூடுதல் ஹெலிகாப்டர் சேவை: அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22-ல் திறந்தபின் தரிசனத்திற்கான கூட்டம் திரளத் துவங்கி விட்டது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும் அயோத்தி செல்வது பெரும் சிரமமாக உள்ளது.

விமானங்களில் செல்வதற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் யோசனையின் பேரில் உ.பி.யின் 6 நகரங்களிலிருந்து அயோத்திக்கு கூடுதல் ஹெலிகாப்டர் சேவைகள் துவக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ யிடம் அதிகாரி வட்டாரங்கள் கூறும்போது, ‘தலைநகரான லக்னோ, கோரக்பூர், மதுரா, வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர்கள் அயோத்திக்கு சென்று வர உள்ளன. இந்தப் பயணத்தில் அயோத்தியின் ராமர் மற்றும் ஹனுமன்கிரி கோயில்களும், சரயு நதிக்கரையும் வானில் வட்டமிட்டபடி பக்தர்களுக்கு காட்டப்படும்’ என்று தெரிவித்தனர்.

இந்த ஹெலிகாப்டர்களுக்கான இறங்கு தளம் சரயு நதிக்கரையில் அரசு சுற்றுலா மாளிகையின் அருகில் அமைந்துள்ளது. சுமார் ரூ.3,600 முதல் ரூ.20,000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in