Published : 24 Jan 2024 07:36 AM
Last Updated : 24 Jan 2024 07:36 AM

சோலார் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்: 2013-ல் மன்மோகன் சிங்குக்கு மோடி எழுதிய கடிதத்தில் தகவல்

புதுடெல்லி: ​பிரதமர் நரேந்திர மோடி 2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக ருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாட்டின் சோலார் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “சோலார் கட்டமைப்பு சார்ந்து உலக நாடுகளை ஒருங்கிணைத்து, இந்தியா அதற்கு தலைமை தாங்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை (சோலார் பேனல்) அமைக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று ‘பிரதமரின் சூர்யோதயா’ திட்டத்தை அறிவித்தார்.

நேற்று முன்தினம் உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி அறிவித்த முதல் திட்டம் இதுவாகும். 2014-ம் ஆண்டே வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டுக்குள் 40 ஜிகாவாட்ஸ் அளவுக்கு சோலார் கட்டமைப்பை உருவாக்க அப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு எட்டப்படவில்லை.

இதையடுத்து இலக்கை அடைவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2022-ம் ஆண்டிலிருந்து 2026-ம் ஆண்டுக்கு நீட்டித்தது. இந்நிலையில், இந்த இலக்கை எட்டும் புதிய முயற்சியாக மத்திய அரசு ‘பிரதமரின் சூர்யோதயா’ திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி, 1 கோடி வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் வசதி உருவாக்கப்படும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “உலகின் அனைத்து பக்தர்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள இந்த புனிதத் தருணத்தில், நாட்டு மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சொந்தசூரிய சக்தி அமைப்பை உருவாக்கித் தரும் தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது. அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு என்னவென்றால், 1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை இலக்காகக் கொண்ட ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டத்தைத் தொடங்குவதாகும்.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மின்சாரத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, சோலார் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறார். 2013-ம் ஆண்டு அவர் குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோலார் கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பாக கடிதம் எழுதியதாக மோடி குறிப்பிட்டிருக்கிறார். “தற்போதைய காலகட்டத்தில் புவி வெப்பமயமாதல் என்பது மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜி8, ஜி20, ஒபெக் போன்று சோலார் கட்டமைப்பு சார்ந்தும் நாடுகள் அணி அமைக்க வேண்டும். அதற்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும். இதன் வழியே, இந்தியாவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பில் உலகின் முக்கிய நாடாக நிலைநிறுத்த முடியும். இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று 2013-ல் மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

73.31 ஜிகாவாட்ஸ்: 2023 டிசம்பர் மாத நிலவரப்படி நாட்டில் 73.31 ஜிகாவாட்ஸ் அளவுக்கு சோலார் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் வீட்டு மாடிகளில் அமைக்கப்பட்டி ருக்கும் கட்டமைப்பு 11.08 ஜிகா வாட்ஸ் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x