பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு ‘பாரத ரத்னா’ விருது: குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு ‘பாரத ரத்னா’ விருது: குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வர் மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது கடந்த 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2019-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், மறைந்த இசைக் கலைஞர் பூபன் ஹசாரியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக யாருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு, அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று இரவு வெளியிட்டது.

பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பிதோஜ்கியா கிராமத்தில் 1924 ஜனவரி 24-ம் தேதி பிறந்தார் கர்ப்பூரி தாக்குர். மாணவ பருவத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 26 மாதங்கள் சிறையில் இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1952-ல் முதல்முறையாக பிஹாரின் தேஜ்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1970-1971 மற்றும் 1977-1979 என 2 முறை பிஹார் முதல்வராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அவர் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார். 1988 பிப்ரவரி 17-ம் தேதி காலமானார். அவரது 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in