Last Updated : 27 Feb, 2018 11:04 AM

 

Published : 27 Feb 2018 11:04 AM
Last Updated : 27 Feb 2018 11:04 AM

முன்கூட்டியே பொதுத்தேர்தல் சாத்தியம் இல்லை: தடையாக இருக்கும் வாக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை?

அடுத்த பொதுத் தேர்தலில் அனைத்து மின்னனு வாக்கு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த ஒப்புகைச் சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை தடையாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெற வேண்டி உள்ளது. இதற்கு முன்பாக கர்நாடகாவிலும் அடுத்த சில மாதங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுடன் சேர்த்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த பாஜகவிற்கு ஒரு திட்டம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'வில் கடந்த மாதம் 30-ல் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வாறு இருதேர்தலும் ஒன்றாக நடைபெற்றால் அதில் பிஹாரும் இணையத் தயாராக இருப்பதாக பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். இத்துடன் பாஜக ஆளும் சில மாநிலங்களும் ஒன்றாக தேர்தல் நடத்த முன்வரும் வாய்ப்புகளும் உள்ளன.

இந்நிலையில், ஒப்புகைச் சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையால் அதுபோல் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரலில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுத்த பொதுத்தேர்தலுக்குள் நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிக்க 30 மாத கால அவகாசம் கேட்ட மத்திய தேர்தல் ஆணையம் பிறகு, ஒப்புக்கொண்டது. இதற்காக சுமார் 16 லட்சம் இயந்திரங்களை மத்திய அரசின் இரு பொது நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இப்பணி இன்னும் முடியாத நிலையில், முன்கூட்டியே தேர்தல் சாத்தியமல்ல எனக் கருதப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ''மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு என தனித்தனியாக இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டி வரும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இவை, அனைத்திலுமே ஒப்புகைச் சீட்டு அவசியம். அடுத்த மே மாதத்திற்குள் பொதுத்தேர்தலுக்கான இயந்திரங்களை தயாரிக்க கடினமுயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இத்துடன் சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் இணைத்து தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல. ஏனெனில், அதற்கு தேவையான கூடுதல் மின்னனு இயந்திரங்களுக்கு மேலும் கால அவகாசம் தேவை. இதற்கான பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குதல் உட்பட வேறு பல சிக்கல்களும் உள்ளன. ஒருவேளை சற்று தாமதமாக ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் நிலை என்றால் மட்டும் அது குறித்து யோசிக்கலாம்'' எனத் தெரிவித்தனர்.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் மக்களவையுடன் சேர்த்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும் நடத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆதரித்து வருவதன் மீது பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையிலும் குறிப்பிடப்பட்டது. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கும்படி தன் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அடுத்த வருடம் ஜனவரிக்குள் பல லட்சம் பேருக்கு 18 வயது முடிந்து வாக்களிக்கும் உரிமை கிடைக்க உள்ளது. இவர்களையும் பிரதமர் மோடி குறி வைத்து பேசி வருகிறார். எனவே, ஜனவரிக்கு பின் மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டி இருக்கும். இத்துடன் மேலும் பல ஆயத்தப் பணிகள் ஆணையத்திற்கு இருப்பதால் 2019 மே வரை பொதுத்தேர்தலே நடத்த முடியாத சூழல் உள்ளது. இத்துடன் சட்டப்பேரவைகளுக்கும் என ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புகளும் மிகக்குறைவாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x