Published : 22 Jan 2024 04:38 AM
Last Updated : 22 Jan 2024 04:38 AM

அயோத்தியில் 30,000 போலீஸாருடன் கமாண்டோ படை பாதுகாப்பு

அயோத்தி: ராமர் கோயில் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, அயோத்தியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 16-ம் தேதி தொடங்கி ஒரு வாரமாகவே சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவில் பங்கேற்க 8,000-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து லக்னோ மண்டல ஏடிஜிபி பியூஷ் மோர்தியா கூறியபோது, ‘‘அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, சரயு நதியில் படகுகள் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வான்வழி கண்காணிப்பு பணியில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

நிலம், நீர், ஆகாயம் என மூன்று மார்க்கத்திலும் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேகப்படும் வகையிலான நபர்கள், பொருட்கள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அயோத்தி முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்துடன் செயல்படும் 11,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தி வான் வெளியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை செயலிழக்கச் செய்யும் சிறப்பு ஜாமர் கருவி கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்படி ராமர் கோயில் வளாகம் சிவப்பு வளைய பாதுகாப்பு பகுதியாகவும், கோயிலுக்கு செல்வதற்கான பிரதான பாதைகள் மஞ்சள் வளைய பாதுகாப்பு பகுதியாகவும், நகரின் இதர பகுதிகள் பச்சை வளைய பாதுகாப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஜி படை தலைமையில் அயோத்தி நகர பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், சிறப்பு கமாண்டோ, என்எஸ்ஜி, தீவிரவாத தடுப்பு படை, மாநில போலீஸார் என 30,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 31 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ‘ரா’ உளவு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அயோத்தியில் முகாமிட்டுள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட மாநில உளவு பிரிவு போலீஸார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர். உயரமான கட்டிடங்களில் குறிதவறாமல் சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று உத்தர பிரதேச காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x