Published : 22 Jan 2024 07:15 AM
Last Updated : 22 Jan 2024 07:15 AM

ராமர் கோயில் பூஜைக்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து புனித நீர்: சமூக ஆர்வலர் தன்வீர் அகமது அனுப்பி வைத்தார்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பூஜை, வழிபாட்டுக்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சாரதா பீடம் கோயிலில் இருந்து புனித நீர் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தன்வீர் அகமது, ஐரோப்பா வழியாக இந்தியாவுக்கு புனித நீரை அனுப்பி வைத்துள்ளார்.

ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக உலகின் 7 கண்டங்களில் இருந்தும் அயோத்திக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாரதா பீடத்தின் கோயிலில் இருந்து புனித நீரை கொண்டு வருவதில் சிக்கல் நிலவியது. எனினும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தன்வீர் அகமது, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சாரதா பீடம் கோயிலின் நீர்நிலையில் இருந்து புனித நீரை சேகரித்து ஐரோப்பா வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக காஷ்மீர் சாரதா மீட்பு கமிட்டி நிறுவனர் ரவீந்தர் பண்டிதர் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதி தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்தது. குறிப்பாக இரு நாடுகள் இடையிலான அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சாரதா பீடம் கோயிலில் இருந்து புனித நீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் தன்வீர் அகமது, சாரதா பீடம் கோயிலின் நீர்நிலையில் இருந்து புனித நீரை சேகரித்து லண்டனில் வசிக்கும் அவரது மகள் மக்ரிபிக்கு அனுப்பி வைத்தார். அவர் புனித நீரை பெற்று பிரிட்டனை சேர்ந்த காஷ்மீர்பண்டிட் சமூக ஆர்வலர் சோனலிடம் ஒப்படைத்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு சோனல் வந்தபோது, இந்திய பிரதிநிதியிடம் புனித நீரை ஒப்படைத்தார். அதன்பிறகு என்னிடம் புனித நீர் ஒப்படைக்கப்பட்டது.

காஷ்மீர் சாரதா மீட்பு கமிட்டி சார்பில் அயோத்தி கோயில் நிர்வாகத்திடம் நேற்று புனித நீர் ஒப்படைக்கப்பட்டது. கமிட்டியின் சார்பில் மஞ்சுநாத் சர்மா, விஎச்பி தலைவர்களிடம் புனித நீரை வழங்கினார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஐரோப்பா வழியாக இந்தியாவுக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டதற்கு விஎச்பி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், தித்வால் பகுதியில் புதிதாக சாரதா பீடம் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தித்வாலில் உள்ள சாரதா பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். இவ்வாறு ரவீந்தர் பண்டிதர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x