Published : 22 Jan 2024 07:36 AM
Last Updated : 22 Jan 2024 07:36 AM
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உ.பி. தலைநகர் லக்னோவில் எங்குப் பார்த்தாலும், காவி கொடிகள், ராமர் படங்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தவிர வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், நெடுஞ்சாலைகள், சாலையோரங்கள், சாலை தடுப்புகள், ரவுண்டானாக்கள் எங்கும் வண்ணமயமான விளக்குகள் ஒளிர விடப்பட்டுள்ளன. மேலும், ஆட்டோ ரிக் ஷாக்கள், இரு சக்கர வாகனங்களில் காவி கொடி கட்டிக் கொண்டு பொதுமக்கள் செல்கின்றனர். செய்தித்தாள் விற்கும் ஷிவா ஜெய்வால் என்பவர், தற்போது காவி கொடி, ராமர் மற்றும் ஆதித்யநாத் படங்களை சிறிய வண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.
லக்னோவின் ஜன்பத் மார்க்கெட் எதிரில் ஷிவா மற்றும் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர். இதுகுறித்து ஷிவா கூறும்போது, ‘‘ரூ.15,000 முதலீடுசெய்து படங்களை வாங்கினேன். கடந்த 10 நாட்களாக சில நூறு ரூபாய்தான் சம்பாதித்துள்ளேன். ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் அதற்கு பிறகு விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறேன். என்னிடம் உள்ள பொருட்களில் முதல்வர் ஆதித்யநாத் மற்றும் ராமர் படங்களை அதிகபட்சமாக ரூ.350-க்கு விற்கிறேன்’’ என்றார்.
லக்னோ பாஜக தலைமை அலுவலகத்துக்கு அருகில் கடை வைத்திருப்பவர் ராகுல் குமார். அவர் கூறும்போது, ‘‘தற்போதைக்கு எங்கள் கடையில் முக்கியமாக ராமர் சம்பந்தப்பட்ட பொருட்கள்தான் அதிகமாக வைத்துள்ளேன். இது இயல்பானது’’ என்றார். இவர் ரூ.60 லட்சம் முதலீடு செய்து இந்து மத சம்பந்தமான பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளார். இதில் காவி கொடி, படங்கள் மட்டுமன்றி ராமர் கோயில் மாதிரிகள், ராமர் சிலைகள் உட்பட ஏராளமான பொருட்கள் அடங்கும். இதில் தினமும் ரூ.1.5 லட்சம் வரை விற்பனை செய்வதாக ராகுல் குமார் மகிழ்ச்சியுடன் கூறுகிார். இதுபோல் ஏராளமான பெரிய மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் வழக்கமான வியாபாரத்தை மாற்றி ராமர் கோயில் தொடர்புடைய பொருட்களையே விற்கத் தொடங்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT