

புதுடெல்லி: அயோத்தி கோயிலில் ராமர் சிலை அமைக்கும் இறுதிகட்டப் பணிகளை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று பார்வையிட்டார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் அவரது சிலைக்கு பிராண் பிரதிஷ்டா கடந்த 15-ல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இக்கோயில் அமைக்கும் பணியில் காஞ்சி காமகோடி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் தற்போதைய சங்கராச்சாரியரான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
அந்தவகையில், அவர் ராமர் கோயிலில் சிலை அமைத்தல் பணியிலும் பல ஆலோசனைகள் அளித்துள்ளார். இவரது மேற்பார்வையின் பேரில்தான் பிராண பிரதிஷ்டாவிற்கான பண்டிதர்களும் தேர்வு செய்யப் பட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீ ராம ஜென்மபூமிஷேத்ரா அறக்கட்டளை அழைப்பின் பேரில் நேற்று மதியம் 1 மணியளவில் விஜயேந்திரர் அயோத்திக்கு விஜயம் செய்தார். அவர் ராமர் கோயிலில் சிலை அமைக்கும் பூஜை நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு நடைபெறும் யாகங்களை மேற்பார்வையிட்டார்.
பிறகு அதை நடத்தும் பண்டிதர்களை அழைத்து ஆகம விதிகளின்படி பூஜைகள் சரியாக செய்யப்படுகின்றனவா? என கேட்டறிந்தார். இதில் சிலரது சந்தேகங்களுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் விளக்கம் அளித்தார். ராமர் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்ட நவபாஷணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
அப்போது அவர் பண்டிதர்கள் மற்றும் ராம பக்தர்கள் சிலரது முன் பேசுகையில், ‘ராமர் கோயில் அமைந்ததன் பலனாக அனைவரும் நலமாக சிறந்து வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு நாடு முழுவதிலும் அனைத்து மத, சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ராமராஜ்ஜியத்தில் பொதுமக்கள் சிறப்புடன் வாழ்ந்தது போல் அனைவரும் மேன்மை அடைய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
ஹைதராபாத் திரும்பினார்: சுமார் 3 மணி நேரம் கோயிலில் தனது ஆலோசனைப் பணிகளைச் செய்தவர் கடைசியாக, கருவறையில் ராமரை தரிசனம் செய்தார். அதன்பின் அவர் தாம் வந்த சிறப்பு விமானத்திலேயே ஹைதராபாத் கிளம்பிச் சென்றார்.
அங்கு அவர் தாம் சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதிற்குமாகக் காஞ்சியில் தொடங்கிய தனது விஜய யாத்திரையில் இருந்தார். இதை அவர் மீண்டும் தொடர ஹைதராபாத் திரும்பிச் சென்றார். முன்னதாக காஞ்சி சங்கராச்சாரியரை ஸ்ரீராமஜென்மபூமி ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மற்றும் பொருளாளர் கோவிந்த தேவ் கிரி, நிர்வாகிகள் வணங்கி வரவேற்றனர்.
இன்று கோயில் விழாவிற்கு சுமார் 11,000 முக்கிய அழைப்பாளர் முன்னிலையில் தனது விஜயம் பொருத்தமாக இருக்காது என்பதால் அவர் மீண்டும் ஒருநாள் வந்து முறையான தரிசனம் செய்வார் எனக் கருதப்படுகிறது.
69-வது சங்கராச்சாரியாரான ஜெயேந்திரர், ராமர் கோயில் மீதான விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார். இக்கோயில் பணியில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்குடன் இணைந்திருந்தார்.
கடந்த 2002-ல் பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் வழக்கின் வாதிகளான இந்து-முஸ்லிம்களிடம் சமாதானம் பேசி பிரச்சினைக்கு முடிவுகட்டவும் முயன்றார். இவரதுமுயற்சி வெற்றிபெறவில்லை எனினும் அதற்கு அப்போதைய பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய் ஆதர வளித்திருந்தார்.
இதன்காரணமாக, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரருக்கும் ஒரு நினைவுச்சிலை அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருப்பது நினைவு கூரத்தக்கது.