Published : 18 Aug 2014 01:05 PM
Last Updated : 18 Aug 2014 01:05 PM

எமர்ஜென்சி காலகட்டத்தில் நாட்டில் பயம் நிலவியது: மன்மோகன் சிங்

எமர்ஜென்சி காலகட்டத்தில் நாட்டில் பயம் நிரம்பிய சூழல் நிலவியதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாக அவரது மகள் தாமன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவரது மகள் தாமன் சிங் "Strictly Personal: Manmohan and Gursharan" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் மன்மோகன் சிங்குடனான தனது உரையாடல்கள் பலவற்றை தாமன்சிங் பதிவு செய்துள்ளார்.

அந்தவகையில், எமர்ஜென்சி காலகட்டம் குறித்து தனது தந்தையிடம் சேகரித்த தகவல்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

தாமன் சிங்: எமர்ஜென்சி காலகட்டம் அரசு ஊழியர்களை எந்தவிதத்தில் பாதித்தது?

மன்மோகன் பதில்: இந்திரா காந்தியின் அந்த நடவடிக்கை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தனர். அனைவரும் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றினர். ஆனால், நாடு முழுவது ஒருவகை பயம் நிரம்பிய சூழல் நிலவியது. கைது நடவடிக்கைகளும், தடுப்புக் காவல்களும் நிறைய நடந்தன. குறிப்பாக, . வடமாநிலங்கள் மற்றும் டெல்லியில் செயல்படுத்தப்பட்ட அரசின் கட்டாய குடும்ப கட்டுபாடு சிகிச்சை பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

எமர்ஜென்சி காலகட்டத்தில் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி தன் வரம்புக்குள் கூடுதலாக அதிகாரத்தை வைத்துக்கொண்டிருந்ததாக நான் உணர்ந்தேன். எமர்ஜென்சிக்குப் பிறகு ஆட்சி மாறியபோதும், சஞ்சய் காந்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அரசு அதிகாரிகள் பலரோ தங்கள் பதவியை இழந்திருந்தனர்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறியதாக தாமன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x