

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில மோசடி வழக்கில் ஆஜராகும்படி, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு ஜார்கண்டில் ஆட்சியைகவிழ்க்க அமலாக்கத் துறை மூலம்சதி செய்கிறது என்று குற்றம் சாட்டிய ஹேமந்த் சோரன், சம்மன் எதற்கும் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், இம்மாதம் 16 – 20 தேதிகளில் விசாரணைக்கு தயாராக இருக்கும்படி, அமலாக்கத்துறை அவருக்கு கடிதம் அனுப்பியது. இதையெடுத்து 20-ம் தேதி தன்னுடைய வீட்டில் வந்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பினார்.
இந்நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் அமலாக்கத் துறைஅதிகாரிகள் ஜார்க்கண்ட் தலைநகர்ராஞ்சியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். அமலாக்கத் துறை விசாரணையை முன்னிட்டு ஹேமந்த் சோரனின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸார்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
அமலாக்கத் துறையின் விசாரணை எதிர்த்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடி அமைப்பினர், அமலாக்கத் துறையும் மத்திய அரசையும் கண்டித்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். மேலும், காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு முன்பு கூடினர்.
சட்ட விரோத சுரங்க வழக்கு மற்றும் நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2022-ம் ஆண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2022 நவம்பரில், சோரனிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.