Last Updated : 09 Feb, 2018 09:14 PM

 

Published : 09 Feb 2018 09:14 PM
Last Updated : 09 Feb 2018 09:14 PM

பெங்களூரு மெட்ரோ ரயிலில் மகளிருக்கு தனிப் பெட்டி: மார்ச் மாதம் முதல் அமல்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் வருகிற மார்ச் மாதம் முதல் மகளிருக்கு தனிப் பெட்டி வசதி செய்யப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நகரமாக விளங்கும் பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது படிப்படியாக பெங்களூரு மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவின் நான்கு திசைகளையும் இணைக்கும் வகையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் மிக குறுகிய நேரத்தில் அதிக தொலைவைச் சென்றடைகிறது. எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மிக விரைவாக‌ விரும்பிய இடத்தை சென்றடைவதால் மெட்ரோ ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பெங்களூரு மெட்ரோ ரயிலில் அலுவலக நேரத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இதிலும் கூட்ட நெரிசல் இருப்பதால் தற்போது கூடுதலாக மேலும் 3 பெட்டிகள் இணைக்க முடிவெடுக்க‌ப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் 1500 பேர் வரை பயணம் செய்யலாம்.

வருகிற மார்ச் மாதம் முதல் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு, ஜூன் முதல் பெங்களூரு மெட்ரோவில் ஓடும் 50 ரயில்களிலும் கூடுதலாக தலா 3 பெட்டிகள் இணைக்கப்படும். முதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ப‌யணிகள் பயணிக்கும் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்படவிருக்கிறது. இதில் தனியாக ஒரு பெட்டி மகளிருக்காக மட்டும் ஒதுக்கப்படும். மகளிரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு, தினமும் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் பெண் பயணிகள் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x