மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காப்பகத்தில் 21 சிறாருக்கு சித்ரவதை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காப்பகத்தில் 21 சிறாருக்கு சித்ரவதை
Updated on
1 min read

இந்தூர்: இந்தூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 21 சிறாரை, காப்பக ஊழியர்கள் சித்ரவதை செய்த சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்துக்கு மத்தியபிரதேச அரசின் குழந்தைகள் நலக் குழுவினர் (சிடபிள்யூசி) அண்மையில் திடீரென ஆய்வுக்குச் சென்றனர்.

அப்போது அங்கு தங்கியிருக்கும் சிறாரை, காப்பக ஊழியர்கள்,நிர்வாகிகள் சித்ரவதை செய்வதாகவும், சிறு தவறுகளுக்குக் கூட கட்டி வைத்து அடிப்பதாகவும், ஆடைகளை களைந்து தலைகீழாகத் தொங்க விடுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் நலக் குழுவினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் சித்ரவதை செய்துள்ளனர். சிறிய தவறுகளுக்குக் கூட தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர். இரும்புக் கம்பியால் சூடும் போட்டுள்ளனர். கட்டி வைத்து அடித்துள்ளனர்.

மேலும் ஆடைகளைக் களைந்துபுகைப்படங்களையும் எடுத்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் முழுவதும் குளியலறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.

அடுப்பில் கார மிளகாயைப் போட்டு அதை முகர்ந்து பார்க்குமாறு சிறுவர்களை சித்ரவதை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, “தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், நம்பிக்கை இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in