

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம்ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயதுமுஸ்லிம் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
மேலும், அவரின் குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலசிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, அவர்களின் தண்டனைக் குறைப்பு மனுவைப் பரிசீலிக்குமாறுமாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம்அறிவுறுத்தியது. அதனடிப்படையில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.அவர்களுடைய விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு மற்றும் பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8-ம் தேதி அளித்த தீர்ப்பில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.இதையடுத்து, விசாரணை நடத்திய நீதிபதிகள், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் சிறைக்குத் திரும்புவதற்கான அவகாசம் நாளைஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து, 11 குற்றவாளிகளில் விபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோர்தியா, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா, கோவிந்த் ஆகிய 5 பேர் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகன் திருமணம், நிலப்பிரச்னை, உடல்நிலை என குற்றவாளிகள் குறிப்பிடும் காரணங்களை நியாயப்படுத்த எந்த தகுதியும் இல்லைஎன்று கூறி மனுக்களை தள்ளுபடிசெய்துள்ளது. மேலும், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.