Last Updated : 16 Feb, 2018 06:38 PM

 

Published : 16 Feb 2018 06:38 PM
Last Updated : 16 Feb 2018 06:38 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது

 

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்ககில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் இன்று கைது செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதைதொடர்ந்து  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மேலும் சிபிஐ புகாரில் இடம் பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது போலீஸார் பதிவு செய்யும் எப்ஐஆருக்கு நிகரானது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை அமலாக்கத்துறையினர் டெல்லியில் இன்று கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான முறைகேடான பண பரிமாற்ற வழக்கு தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதையடுத்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x