Published : 19 Jan 2024 04:45 AM
Last Updated : 19 Jan 2024 04:45 AM

அயோத்தி கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது: ஜன.22-ல் அரைநாள் விடுமுறை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கருவறையில் 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டு 4 மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. அன்று பிராயச்சித்தா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார். தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கங்காதிவஸ் போன்ற பூஜைகள் இனி வரும் நாட்கள் நடைபெற உள்ளன.

22-ம் தேதி மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை மதியம் 1 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நேற்று மாலை நிறுவப்பட்டது. இந்த சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலைக்கு கணேச - அம்பிகா பூஜை, வருண பூஜை போன்ற பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன. இந்த சிலையின் கண்கள், துணியால் மூடப்பட்டுள்ளது. திறப்பு விழா நாளில் இந்த துணி அகற்றப்பட்டு, பிரதிஷ்டை பூஜைகள் நடைபெறும்.

இதற்கிடையே, ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் நேரடியாக பங்கேற்கவும், தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை காண ஏதுவாகவும் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களுக்கு 22-ம் தேதி அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 2.30 மணி வரை அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பணியாளர் நல அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “பெரும்பாலான மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x