Published : 19 Jan 2024 07:00 AM
Last Updated : 19 Jan 2024 07:00 AM
புதுடெல்லி: மதுபான வரி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை எனக்கு அனுப்பியுள்ள சம்மன்கள் சட்டவிரோதமானது என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
மதுபான வரி ஊழல் வழக்கில் நேற்று அல்லது இன்று ஆஜராகுமாறு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு இந்த சம்மன்கள் சட்டவிரோதம் என அமலாக்கத்துறைக்கு அர்விந்த் கேஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மதுபான வரி ஊழல் வழக்கில் ஜனவரி 18 அல்லது 19-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த வாரம் எனக்கு 4-வது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. அமலாக்கத்துறையை பாஜக இயக்குகிறது. அவர்களின் ஒரே நோக்கம் என்னைகைது செய்வதுதான். அப்போதுதான் வருகிற மக்களவை தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ய முடியாது.
எனக்கு அனுப்பப்பட்ட 4 சம்மன்களும் சட்ட விரோதம் என அமலாக்கத்துறைக்கு நான் பதில் அளித்து விட்டேன். ஆனால், அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கவில்லை. அரசியல் சதியின் கீழ் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. இது போன்ற பொதுவான நோட்டீஸ்களை நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் ரத்து செய்துள்ளன.
மதுபான வரி ஊழல் வழக்கு2 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆனால், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிலரை துன்புறுத்தி பொய் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT