

மக்களவையில் தொழிலாளர் கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இரண்டு மசோதாக்கள் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. பெண் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல், கூடுதல் பணி நேரத்திற்கான கால அளவை அதிகரித்தல், பொறியியல் படிப்பை சாராத பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்தல் போன்ற ஷரத்துகள் இந்த சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதாக்களை தாக்கல் செய்வது தொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு வெளியிட்டபோது, அதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் இந்த மசோதாக்கள் அவசர கதியில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இவை மிகப்பெரிய அளவிலான சட்டத்திருத்தங்களை கொண்ட மசோதாக்கள். எனவே, அதை ஆய்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பு, அதை ஆய்வு செய்ய நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்றார்.
மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கையை நிராகரித்த சுமித்ரா மகாஜன், “இப்போது இந்த மசோதாக்கள் அறிமுகம் மட்டுமே செய்யப்படுகிறது. இதன் மீது உறுப்பினர்கள் பின்னர் முறையாக விவாதிக்கலாம்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா – 2014, பணியிடத்தில் தொழிற்பயிற்சி சட்டத் திருத்த மசோதா – 2014 ஆகியவற்றை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.