Published : 18 Jan 2024 09:59 PM
Last Updated : 18 Jan 2024 09:59 PM
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
நடந்தது என்ன? - வியாழக்கிழமை (ஜன.18) அன்று ஹார்ணி ஏரிக்கு மாணவர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்தச் சூழலில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் மதியம் கவிழ்ந்துள்ளது. இதில் 7 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படகு கவிழ்ந்த தகவலை அறிந்து வருத்தம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசு தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மாநில அரசு தரப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது அவர் வதோதரா விரைந்துள்ளார். அவருடன் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT