Published : 18 Jan 2024 08:37 AM
Last Updated : 18 Jan 2024 08:37 AM

சென்னை, சேலம், மதுரை உட்பட 66 நகரங்களில் இருந்து அயோத்திக்கு 66 சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. 23-ம் தேதி முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு கோயில் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ஆஸ்தா (நம்பிக்கை) சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 66 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 22-ம் தேதி முதல் இந்த ரயில் பயணம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 22 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். சிறப்பு ரயில்களுக்கான ஏற்பாடுகளை ரயில்வே அமைச்சகம் சிறப்பாக செய்துள்ளது. இதற்கான முன்பதிவு வசதி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வெளியிடப்படவுள்ளது. அயோத்தி சென்று வரும் வகையில் ரவுண்ட் டிரிப் முறையில் முன்பதிவு செய்யலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படுகின்றன. டெல்லியை பொறுத்தவரை நியூ டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன், ஆனந்த் விஹார் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படவுள்ளன.

மேலும் அகர்தலா, தின்சுகியா, பார்மெர், கத்ரா, ஜம்மு, நாசிக், டேராடூன், பத்ராக், குர்தா ரோடு, கோட்டயம், செகந்திராபாத், ஹைதராபாத், காஜிபேட் ஆகிய நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் அயோத்தி நகருக்கு இயக்கப்படவுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர், புனே, மும்பை, வர்தா, ஜால்னா, நாசி உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன.

ஆஸ்தா என்றால் நம்பிக்கை என்று அர்த்தமாகும். கடவுள் ராமர் மீதான பக்தர்கள் நம்பிக்கையைக் குறிக்கும் பொருட்டு இந்த ரயில்களுக்கு ஆஸ்தா ரயில்கள் என்று ரயில்வே அமைச்சகம் பெயர் சூட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x