

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடர டெல்லி போலீஸுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது கூட்டாளி சோட்டா ஷகீல், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் சுதானி, சல்மான், எத்திஷாம் உள்ளிட்டோர் மீது கடந்த ஆண்டு டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இவர்கள்தான் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தை இயக்கி வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் ‘மோக்கா’ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சாண்டிலா ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர் களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தாவூத் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கூடுதல் குற்ற வியல் நீதிபதி பாரத் பராசர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்தியாவில் இல்லாததால், கைது வாரன்டை அமல்படுத்த முடிய வில்லை’ என்று போலீஸார் தெரிவித்தனர். அப்போது தாவூத் மற்றும் சோட்டா ஷகீல் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தாவூத் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று போலீஸார் பதிலளித்தனர். இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி, ‘இந்த வழக்கில் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சொத்து முடக்க நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமைக்காவலர் அதுபற்றி எந்தக் குறிப்பையும் பதிவு செய்யவில்லை. பெரும்பாலான ஆவணங்கள் மராத்தி மொழியில் உள்ளன. சில இந்தி மொழியில் உள்ளன. அதுவும் முறையாக இல்லை.
நீதிமன்றத்தின் மொழியில் ஆவணங்களை மொழி மாற்றம் செய்து தாக்கல் செய்ய வேண்டும். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், தாவூத் மற்றும் சோட்டா ஷகீல் சொத்துகளை முடக்க புதிதாக நடவடிக்கைகளை தொடர வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.