Published : 17 Jan 2024 04:43 AM
Last Updated : 17 Jan 2024 04:43 AM
சென்னை: சென்னை - பெங்களூரு - மைசூரு வரையிலான 435 கி.மீ. தூரத்துக்கு அதிக வேக ரயில் போக்குவரத்து (புல்லட் ரயில்) தொடங்க தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், சென்னை - மைசூரு இடையே அதிகவேக பாதையில் 9 ரயில் நிலையங்களுடன் அதிவேக ரயில் (புல்லட்) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பயண நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக குறையும். இந்த ரயில் அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் செல்லும். 750 பேர் பயணம் செய்யலாம்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக திகழும் சென்னையையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் மையமான பெங்களூருவையும், கர்நாடகாவின் கலாச்சார தலைநகரான மைசூருவையும் இணைக்கும் லட்சிய திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் முன்னெடுத்து வருகிறது.
9 ரயில் நிலையங்கள்: தமிழகத்தில் சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கர்நாடகா மாநிலத்தில் பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னப்பட்டிணா, மாண்டியா, மைசூரு ஆகிய 9 நிலையங்களை கொண்ட அதிவேக ரயில் திட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிவேக ரயில் போக்குவரத்துக்கான ஆரம்பகட்ட அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொது சீரமைப்பு வரைதல், சர்வே மற்றும் பயன்பாடுகளை அடையாளம் காண்பது போன்ற அத்தியாவசிய அடிப்படை பணிகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. நில அளவீடு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழித்தட பாதையில் நடந்துவரும் நில அளவீடு மற்றும்பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
விரிவான திட்ட அறிக்கையில், சரியான சீரமைப்பு, நிலைய இருப்பிடங்கள், பயணிப்போர் மதிப்பீடு விவரம் மற்றும் கட்டண அமைப்பு போன்ற முக்கியமான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.25 மணி நேர பயணம்: பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹோஸ்கோட் மற்றும் சென்னை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே அதிவிரைவு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் மைசூரு - சென்னை பயணத்தை வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களில் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வந்தே பாரத் விரைவு ரயிலில்பயண நேரம் 6 மணி 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை - பெங்களூரு - மைசூரு அதிவேக ரயில் திட்டம் வணிக பயணத்துக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். இதன்மூலம் வணிக நிறுவனங்களின் வருகை, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை- பெங்களூரு - மைசூரு இடையே பயண நேரம் குறையும். இதன்மூலம், தொழில் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
4 வழித்தடங்கள்: நாட்டில் சென்னை - மைசூரு(435 கி.மீ.), டெல்லி - அமிர்தசரஸ் (459 கி.மீ), மும்பை - ஹைதராபாத் (711 கி.மீ), வாராணசி -ஹவுரா (760 கி.மீ.) ஆகிய 4 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்தை தொடங்க தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டது.
இதில் ஒன்றாக சென்னை - மைசூரு அதிவேக ரயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த கள ஆய்வு பணிகள் தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே, மெட்ரோ ரயில், பேருந்துகளை இணைக்கும் வகையில், பல்வகை மாடல் போக்குவரத்து மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில மாதங்களில் சீரமைப்புக்கான கணக்கெடுப்பு முடிந்தபிறகு இதுபற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.
750 பேர் பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நெட்வொர்க் போன்ற நிலையான மற்றும் தரமான பாதையாக இருப்பு பாதை அமைக்கப்படும். அதிவேக ரயில்கள் அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இந்த ரயிலில் 750 பேர் பயணம் செய்யும் வகையில் திறன் கொண்டு இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT