மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி சொல்லும் காரணம் என்ன?

மாயாவதி
மாயாவதி
Updated on
1 min read

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதே வேளையில், பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை (ஜன.15) அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இது குறித்து தெரிவித்துள்ளதாவது,“பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம், அதனால்தான் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம்.

இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in