Published : 21 Aug 2014 02:55 PM
Last Updated : 21 Aug 2014 02:55 PM

அசாம் எல்லையில் மீண்டும் கலவரம் வெடித்ததால் பதற்றம்

அசாம் - நாகாலாந்து எல்லையில் இன்று ராணுவ அணிவகுப்பு நடைபெறுவதைத் தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது கலவரம் வெடித்தது. ஊரடங்கு உத்தரவை மீறி அசாம் எல்லையில் ஏற்பட்ட கலவரத்தைத் தடுக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

நாகாலாந்து எல்லையோரம் அமைந்துள்ள அசாமின் கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் சிலர் மீது நாகா தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லைப் பிரச்சினை காரணமாக அசாம் - நாகாலாந்து எல்லையில் பதற்றம் உள்ளதால், அங்கு இரு மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, துணை ராணுவத்தை எல்லைப் பாதுகாப்புக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

அசாம் எல்லை கிராம மக்கள் மீது துணை ராணுவத்தையும் மீறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த கோலாகட் மாவட்ட மக்கள், நேற்று துணை ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கோலாகட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதற்றம் நீடித்ததால், அங்கு கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியது. இந்த நிலையில், இன்று கோலாகட் மாவட்டத்தின் நவுலிமார்க் தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவத்தினர், கொடி அணிவகுப்பை நடத்தினர்.

அப்போது அங்கு திடீரென திரண்ட கிராம மக்கள், கொடி அணிவகுப்பை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலைகளில் மரங்களை சாய்த்து, சாலையை முடக்கினர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகளின் மீது கற்களை வீசி கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். வாகனம் ஒன்று சேதமடைந்தது.

நவுலிமார்க் கிராமவாசியை துணை ராணுவத்தினர், நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்து, அது குறித்து அலுவலக ரீதியான அறிவிப்பு வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டினர்.

மேலும், கிராமவாசிகள் போராட்டம் நடத்தி, ராணுவத்தினர் மீது தாக்குதலை தொடர்ந்ததால், அவர்களை கட்டுப்படுத்த போலீஸார், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அசாம், நாகலாந்து எல்லை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கலவரம் குறித்து, இரு மாநில முதல்வர்களும் அசாம் தலைநகர் குவஹாட்டியில் சந்தித்து, ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x