‘மகாதேவ்' செயலி வழக்கில் மேலும் இருவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

‘மகாதேவ்' செயலி வழக்கில் மேலும் இருவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

Published on

ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் கூடுதலாக நிதின் திப்ரிவால் மற்றும் அமித் அகர்வால் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவ்விருவரும் கடந்த வெள்ளிக்கிழமை, ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மகாதேவ் செயலி மூலமாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டு நிதின் திப்ரிவாலும், அமித் அகர்வாலும் சில சொத்துகள் வாங்கியுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இவ்விருவரையும் வரும் 17-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்செயலியின் நிறுவனர்களான சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பாலை துபாய் காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் இறங்கி இருக்கும் அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு, இவ்வழக்குத் தொடர்பாக இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.

இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in