Published : 14 Jan 2024 05:56 AM
Last Updated : 14 Jan 2024 05:56 AM
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை நடத்திய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராமர் கோயில்: தெய்வீக கனவை நிறைவேற்றுதல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ராமர் கோயில் கட்டுவதற்காக 1990-ல் நான் ரத யாத்திரை நடத்தினேன். இதற்கான இயக்கம் தொடங்கப்பட்டபோது உண்மையான மதச்சார்பின்மை எது, போலி மதச்சார்பின்மை எது என்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஒருபுறம் இந்த இயக்கத்துக்கு மக்கள் ஆதரவின் அடித்தளம் இருந்தது. மறுபுறம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அதை ஆதரிப்பதில் இருந்து பின்வாங்கின. இந்த வாக்கு வங்கி அரசியலின் மோகத்துக்கு அடிபணிந்து அதை மதச்சார்பின்மை என்ற பெயரில் நியாயப்படுத்தினார்கள்.
எனவே, அயோத்தியில் ராமஜென்மபூமி கோயிலை புனரமைப்பதே, இந்த இயக்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்தது. மேலும் ராமர் கோயிலானது, போலி மதச்சார்பின்மையின் தாக்குதலில் இருந்து மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தத்தை மீட்டெடுப்பதற்கான அடையாளமாகவும் மாறியுள்ளது.
கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் பிரபலமானவர் அல்ல.
ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை, பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது.
அந்த யாத்திரையின்போது அரங்கேறிய சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை தந்தன. எங்களது ரதம் செல்லும் இடமெல்லாம் யாரென தெரியாத கிராம மக்கள் எங்களுக்கு அதீத வரவேற்பு கொடுத்தனர். அது பகவான் ராமருக்கு கோயில் வேண்டுமென மக்கள் விரும்பியதன் வெளிப்பாடு. வரும் 22-ம் தேதி ராமர் கோயிலில் கவுரவம் மட்டுமல்லாது மக்களின் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள காற்று மண்டலத்தில் ராம மயம் ஒலிக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பெருமைக்குரிய உறுப்பினராக மட்டுமின்றி, இந்தியாவின் பெருமைக்குரிய குடிமகனாகவும் இந்தக் கனவு நிறைவேறும் தருணம் எனக்கு நிச்சயம் பெருமைளிக்கிறது. னது வாழ்நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். ராமர் கோயில் உருவாக காரணமான பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபட்ட கரசேவகர்கள் உள்ளிட்ட எண்ணற்ற மக்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT