அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படுவதால் நாடு முழுவதும் ரூ.50,000 கோடி வியாபாரம்: அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தகவல்

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படுவதால் நாடு முழுவதும் ரூ.50,000 கோடி வியாபாரம்: அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது. இது, நாடு முழுவதிலும் வர்த்தகம் மற்றும் சேவைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாராணசியில் உள்ளஅனைத்து ஓட்டல்களும் விடுதிகளும் முன்கூட்டியே பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அயோத்தியில் கோயில் பணிகள் தொடங்கிய பிறகு தங்கும் வசதியுடன் பல ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பலநட்சத்திர விடுதிகளும், ஓட்டல்களும் கட்டப்பட உள்ளன.

இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளத்தின் தேசியப் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டல்வால் கூறும்போது,“ராமர் கோயிலால், நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகளுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான வியாபாரம் புதிதாக உருவாகும். சிறிய வியாபாரிகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பலன்பெற உள்ளனர்.

ராமர் கோயில் தொடர்பான பலபொருட்கள் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. ராமரின் உருவம் பதித்த கீசெயின்.படங்கள், துணிகள், பேனர்கள் என பல பொருட்கள் இதில் அடங்கும். ராமருக்கான அலங்காரப் பொருட்களும் கோயிலின் வடிவமும் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக், மரம், காகித அட்டைபோன்றவற்றில் தயாரிக்கப்படுகின்றன” என்றார்.

வியாபாரிகள் தவிர கைவினைஞர்கள், ஓவியர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள் என பிற துறைகளை சேர்ந்தவர்களும் பலன் அடைந்து வருகின்றனர். ஆன்மிகம் தொடர்பான பண்டிதர்கள் உள்ளிட்டோருக்கும் ராமர் கோயிலின் பலன் கிடைத்துள்ளது. வாடகைவாகனத் துறையினர், வாகன ஓட்டுநர்கள், பல்வேறு நிலையிலான பணியாளர்கள் உள்ளிட்டோரும் பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.

ராமர் கோயிலுக்கு பிறகு பிரம்மாண்ட ரயில் நிலையம், புதிய சர்வதேச விமான நிலையம் என அயோத்தி பல மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in