Published : 13 Jan 2024 07:15 AM
Last Updated : 13 Jan 2024 07:15 AM
குவாஹாட்டி: அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தஒரு பெண் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். மேலும் எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு 4 குழந்தைகள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ‘முக்கியமந்திரி மஹிளா உதயமிதா அபியான்' (எம்எம்யுஏ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அறிவித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, படிப்படியாக, மாநில அரசின் அனைத்து பயனாளி திட்டங்களும் இத்தகைய மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் கிராமப்புற சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், கிராமப்புற சிறு தொழில் முனைவோராக வளர உதவுவதே எம்எம்யுஏ திட்டத்தின் நோக்கமாகும். இது, பயனாளியின் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “குழந்தைகளின் எண்ணிக்கையுடன் திட்டத்தை இணைப்பதற்கான காரணம், பெண்கள் தங்கள் வணிகங்களை அமைக்க நிதியைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகும்.ஒரு பெண்ணுக்கு 4 குழந்தைகள் இருந்தால், வணிகம் செய்ய அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளை படிக்க வைக்க அவருக்கு நேரம் சரியாக இருக்கும்” என்றார்.
அசாம் அரசு சுமார் 145 வணிகத் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து அரசு மானியத்தை பொதுமக்கள் பெறலாம். முதல் ஆண்டில், அரசு ரூ.10 ஆயிரம் வழங்கும். அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 12,500, வங்கிக் கடனாக ரூ. 12,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT