மக்களவைத் தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் 2-வது ஆலோசகரை இழக்கும் காங்கிரஸ்

சுனில் கனுகோலு
சுனில் கனுகோலு
Updated on
1 min read

புதுடெல்லி: அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சுனில் கனுகோலு. பின்னர் இவர் கிஷோரிடமிருந்து பிரிந்து தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர்தான், காங்கிரஸ்மூத்த தலைவர் ராகுல் காந்தியைஅரசியலில் முக்கியத்துவப்படுத்துவதற்காக, ‘பாரத் ஜோடோ' யாத்திரை திட்டத்தை வடிவமைத்தவர். அத்துடன் கர்நாடகா, தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர் சுனில் கனுகோலுதான். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூகத் திட்டத்தில் சுனில் கனுகோலு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அணியிலிருந்து விலகினார். அதன் பிறகு சுனில் கனுகோலுதான் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநிலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வந்தார்.

ஆனால் அவர் தற்போது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார அணியில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து 2-வது ஆலோசகரான சுனில் கனுகோலுவையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பதிலாக சுனில் கனுகோலு ஹரியாணா, மகாராஷ்டிரா மாநில பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘சுனில் கனுகோலு விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சிறிது பின்னடைவுதான். எனினும் அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காகபணியாற்றுவார். கர்நாடக முதல்வர்சித்தராமையாவின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். எந்தவித சூழ்நிலையையும் அவர் எளிதில் கையாண்டு விடுவார். இண்டியா கூட்டணிக்கும் அவர் தகுந்த யோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in