மேற்கு வங்கத்தில் அமைச்சர், எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் அமைச்சர், எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ், எம்எல்ஏ தபஸ் ராய் வீடு, சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த மோசடி தொடர்பாக அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் ரெய்டு நடப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு (2023) ஏப்ரலில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நகராட்சி அமைப்புகளில் நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 6.40 மணி முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை என இரண்டு அமைப்புகளுமே விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி, சிபிஐ 16 இடங்களில் ரெய்டு மேற்கொண்டது. நாடியா, ஹூக்ளி, 24 வடக்கு பர்கானாஸ் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளாட்சி அமைப்புகள் முறைகேட்டுப் புகார் மீது மத்திய அமைப்புகள் விசாரணையை உறுதி செய்தது. தொடர்ந்து கடந்த அக்டோபர் 5 ஆம் தேதீ, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ரத்தின் கோஷ் வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in