Published : 12 Jan 2024 05:41 AM
Last Updated : 12 Jan 2024 05:41 AM
புதுடெல்லி: டெல்லியில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஜாமீன் கேட்டு டெல்லிஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
தங்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசை பெற்றுத் தரவில்லை என்று மருமகளை கொடுமைப்படுத்தும் பெற்றோரிடம், ‘‘குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தங்களது மகனின் குரோமோசோம்தான் முடிவு செய்கிறது. மருமகள் அல்ல.என்ற அறிவியல் உண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’. தங்களது மகள் திருமணமாகி கணவர் வீட்டில்மிகவும் வசதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், மருமகளை மட்டும்சித்ரவதை செய்வது கவலை அளிக்கிறது.
பொதுவாக பெண்களின் உடலில் இரண்டு எக்ஸ் (X) குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களின் உடலில் எக்ஸ் (X) மற்றும் ஒய் (Y) என 2 குரோமோசோம்கள் இருக்கும். இதில் கருவில் உருவாகும் குழந்தை ஆணா, பெண்ணாஎன்பதை ஆணின் ‘ஒய்’ குரோமோசோம்தான் தீர்மானிக்கிறது என்றுஅறிவியல் கூறுகிறது. இந்த உண்மை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதற்கு சம்பந்தப்பட்ட பெண் மட்டும்தான் காரணம் என்பது போல் கணவர் வீட்டார் சித்ரவதை செய்துள்ளனர். இதுபோன்ற பல வழக்குகளை நீதிமன்றம் பார்த்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பது தெளிவாகிறது. இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதற்காக கொடுமை அனுபவித்து ஒரு பெண் உயிரை விட்டிருக்கிறார். இதை ஏற்க முடியாது. அத்துடன், வழக்கு விசாரணையும் தொடக்க நிலையில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT