

மும்பை: கனரா வங்கியில் ரூ.538 கோடிகடன் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், உடல்நலம் குன்றிய மனைவியை பார்க்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே மனுவை விசாரித்து நேற்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: மனிதாபிமான அடிப்படையில் நரேஷ் கோயலுக்கு தனியார் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி அனிதா கோயலை தெற்கு மும்பையில் உள்ள வீட்டில் சந்திக்க சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் சிறை அடைக்கப்படும் நேரம் வரை அனுமதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளை அமலாக்கத் துறை கண்காணிக்கலாம். மேலும், புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து தனியார் நிபுணர்கள் நரேஷ் கோயலை சந்தித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.