ஹரியாணா நூ கலவர குற்றவாளி பிட்டு பஜ்ரங்கியின் சகோதரர் மஹேஷ் பஞ்சால் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஹரியாணா நூ கலவர குற்றவாளி பிட்டு பஜ்ரங்கியின் சகோதரர் மஹேஷ் பஞ்சால் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: கொலை முயற்சியில் தப்பி தீக்காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஹேஷ் பஞ்சால் நேற்று மரணமடைந்தார். இவர், ஹரியாணாவின் நூ கலவரத்தின் குற்றவாளி பிட்டு பஜ்ரங்கியின் சகோதரர்.

கடந்த ஆண்டு ஜுலை 31-ல் ஹரியாணாவின் நூவில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளத்தின் ஆதரவில் நடைபெற்ற ஆன்மிக ஊர்வலம், மதக்கலவரமாக மாறியது. இதில், முக்கியக் குற்றவாளியான பிட்டு பஜ்ரங்கி எனும் ராஜ்குமார் போலீஸாரால் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர், ஹரியாணாவின் பரீதாபாத்தில் தனியாக ஒரு பசு பாதுகாவலர் படை நடத்துகிறார். இவர், நூ மதக்கலவரத்தில் கைதான முக்கிய குற்றவாளி மோனு மானேசருக்கு நெருக்கமானவர்.

பஜ்ரங்கியும் நூ கலவரத்துக்கு முன்பாக ஆத்திரமூட்டும் பல காட்சிப் பதிவுகளை சமூவலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். பஜ்ரங்கி மீது ஏற்கெனவே சுமார் 20 வழக்குகளில் ஜாமீனில் இருந்த நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 18 இல் பிட்டு கைது செய்யப்பட்டிருந்தார். பிட்டுவிடம் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டிருந்தன. இவருடன் இணைந்து பிட்டுவின் சகோதரரான மஹேஷ், பரீதாபாத்தின் காய்கறி சந்தையில் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மஹேஷைத் தேடி கடந்த டிசம்பர் 13 நள்ளிரவில் காய்கறி சந்தைக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் வந்தனர். இவர்கள், மஹேஷ் மீது சூடான எண்ணெயை வீசி தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். இதில், அருகிலிருந்த சாக்கடை கால்வாயில் குதித்து மஹேஷ் உயிர் தப்பினார். எனினும், அவர் மீது தீக்காயங்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால், அங்கிருந்த பிகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் டெல்லியின் சப்தர்ஜங்கிற்கு மாற்றப்பட்டிருந்தார். இங்கும் முடியாமல் அவர் டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுவும் பலனின்றி மஹேஷ், திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மீது அப்பகுதியின் சரண் காவல்நிலையத்தார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சுமார் 25 நாட்களான பின்பும் அவர்கள் சிக்கவில்லை. காய்கறி சந்தையில் இருந்த சிசிடிவி பதிவுகளாலும் பலன் கிடைக்காமல் உள்ளது. இந்த சம்பவம், நூ கலவரத்தில் பழிவாங்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. நேற்று உடற்கூறு ஆய்விற்கு பின் மஹேஷின் உடலை வாங்க மறுத்து அவரதுகுடும்பத்தார் போராட்டம் நடத்தினர்.

பிட்டு பஜ்ரங்கியும் தனது ஆதரவாளர்களுடன் ஹரியாணாவின் வல்லப்கர்-சொனா நெடுஞ்சாலையை மறித்து ஆர்பாட்டம் நடத்தி இருந்தார். பின்னர் பரீதாபாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலையீட்டால், பிரச்சனைகள் முடிவிற்கு வந்தன.

இச்சூழலில், விஷ்வ இந்து பரிஷத்தினர் மஹேஷின் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவும், பிட்டு பஜ்ரங்கியின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி ஹரியானா முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in