Last Updated : 11 Jan, 2024 11:47 AM

 

Published : 11 Jan 2024 11:47 AM
Last Updated : 11 Jan 2024 11:47 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனத்துக்கு தடையாக இருக்கிறாரா ராபர்ட் வதேரா? - டெல்லி மேலிடத்தில் குவியும் புகார்கள்

புதுடெல்லி: தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் நியமனத்தில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தடையாகி வருவதாக சர்ச்சைகள் உலவுகின்றன. இது தொடர்பான காங்கிரஸின் தேசியத் தலைமையிடம் தமிழகத்தில் இருந்து புகார்கள் குவிவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் 3 வருடப் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அப்பதவியில் சுமார் 2 வருடங்களாகத் தொடர்பவருக்கு பதிலாக புதியவரை அமர்த்த, காங்கிரஸின் தேசியத் தலைமை திணறுவதாகத் தெரிகிறது. கடந்த வருடம் புதிய தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அமர்ந்ததும் தலைவர் அழகிரியின் பதவி தப்பிவிட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக புதியவரை நியமிப்பதில் காங்கிரஸ் சுணக்கம் காட்டுவதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் அப்பதவிக்கு பேசப்படுபவர்களில் முக்கியமானவரான சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை, ராபர்ட் வதேராவுடன் இணைத்து நெருக்கடி அளிப்பது காரணமாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தொழிலுக்கு கார்த்தி பல வகைகளில் உதவியாக உள்ளார். ராபர்ட்டின் தொழில் பங்குதாரராக கார்த்தி இருப்பதாகவும் பேச்சுக்கள் உள்ளன. இந்த உறவால் அவர் முயலும் தலைவர் பதவியை நேரடியாக மறுக்க தலைமைக்கு விருப்பமில்லை. இதன் பலனை அனுபவிக்கும் வகையில் அழகிரி பதவிக் காலம் முடிந்தும் தொடர்கிறார்.

இந்த நிலை காங்கிரஸை தமிழகத்தில் நலிவடையச் செய்கிறது. ஏனெனில், ராகுலின் பாதயாத்திரைகளால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தனது தவறான நடவடிக்கைகளால் ராகுலை உரிய முறையில் முன்னிறுத்தி பலன்பெறத் தமிழக காங்கிரஸ் தவறிவிட்டது. இதனால், அடிமட்ட தொண்டர்கள் பலரும் கட்சி மாறத் துவங்கி விட்டனர். இது, தமிழகத்துக்கு புதிய தலைவரை அமர்த்தினால்தான் நிறுத்தம் பெறும்.

இச்சூழலில், இதர சில கட்சிகளை போல காங்கிரஸுக்கும் செல்வாக்கு குறைகிறது. இதை சாக்காக வைத்து திமுக தன் தேர்தல் உடன்பாட்டில் காங்கிரஸுக்கு தொகுதிகளை குறைக்கத் திட்டமிடுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், புதிய தலைவரை உடனடியாக நியமித்து தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்திக் காட்டுவது அவசியம் என தமிழகத்தில் இருந்து புகார் கடிதங்கள் குவிகின்றன” எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, காங்கிரஸின் 2022 உதய்பூர் சிந்தனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, மாநிலங்களவை எம்.பி.யாக தந்தை ப.சிதம்பரம் இருப்பதால் அவரது மகன் கார்த்திக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது. மேலும், தன் மீதான பல்வேறு வழக்குகளாலும் கார்த்தியின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எம்.பி.யான கார்தியிடம் கேட்டபோது, அந்தப் புகாரை மறுத்தவர், அதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை. இது குறித்து கார்த்தி எம்.பி.யின் நட்பு வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினர். அவர்கள் கூறுகையில், “தமிழக காங்கிரஸ் தலைவர் என்பது திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப தலைமை அளிக்கும் நியமனப் பதவி. இதற்காக, கட்சியில் யாருமே முயற்சிக்க முடியாது. காங்கிரஸின் இதர தலைவர்களை போல் கார்த்தியும் ஒரிரு முறை ராபர்ட்டை பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளார். இதை வைத்து அவரது தொழிலுக்கு உதவியவர், பங்குதாரர் என ஆதாரங்களின்றி கூறுவது, கார்த்தி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டும் தவறானச் செயல். இதில் துளியும் உண்மை இல்லை” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய விவகாரத்தில் எம்.பி கார்த்திக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இன்னும் அவர் பதில் தரவில்லை. இந்த நோட்டீஸால், கார்த்தி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எடுக்கும் முயற்சிக்கும் தடை உருவாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x