“நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்... பிரதமர் மோடி வீடு கட்டித் தருவார்” - ராஜஸ்தான் அமைச்சர்

ராஜஸ்தான் அமைச்சர் |  பிரதமர் மோடி
ராஜஸ்தான் அமைச்சர் | பிரதமர் மோடி
Updated on
1 min read

உதய்பூர்: “யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடியின் கனவு. நீங்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார்” என ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் பாபுலால் காரடி. இவர் உதய்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர். அதாவது, 2023 சட்டமன்றத் தேர்தலில் ஜடோல் தொகுதியில் இருந்து நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் உதய்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடியின் கனவு. நீங்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார். அதன்பிறகு என்ன பிரச்சனை?” என்றார். இவரின் பேச்சைக் கேட்ட மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். இது குறித்து அவர், “பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி உள்ளது. மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.450-க்கு சிலிண்டர்கள் கிடைக்கச் செய்கிறது” என்றார். இவருக்கு இரண்டு மனைவிகளும், எட்டு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in