Published : 10 Jan 2024 01:08 PM
Last Updated : 10 Jan 2024 01:08 PM

“இந்திய வரலாற்றில் நரேந்திர மோடி வெற்றிகரமான பிரதமர்” - அம்பானி புகழாரம்

அம்பானி

குஜராத்: சர்வதேச நிறுவனங்களின் பார்வையைக் குஜராத் நோக்கி ஈர்க்கும் வகையில் ’துடிப்பான குஜராத்’ என்னும் பெயரில் 10- வது உச்சி மாநாடு காந்திநகரில் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அம்பானி, 'இந்திய வரலாற்றிலேயே நரேந்திர மோடி வெற்றிகரமான பிரதமர்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

குஜராத்தில் நடைப்பெறும் 10-வது உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த வர்த்தக மாநாடு மூன்று நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 100 நாடுகள் பங்கேற்பதுடன் 33 நாடுகள் பங்குதாரர்களாக இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பசுமை ஆற்றலைத் தயாரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, வரும் காலாண்டுக்குள் ’திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி கிகா காம்ப்ளக்ஸ்’ ஜாம்நகரில் 5000 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டு, அதில் பசுமை ஆற்றல் எரிபொருட்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் பசுமை ஆற்றலை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவைச் சிறந்து விளங்கச் செய்யும்.

மேலும், இந்தியாவில் முதல்முறையாக ’கார்பன் ஃபைபர்’ வாயிலாக 5ஜி சேவையை ஹசிராவில் நிறுவ ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதனால், 5ஜி மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பம் சார்ந்து பல வேலை வாய்ப்புகளின் மையமாக குஜராத் திகழும். கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு செய்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. எனவே, ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதும் "குஜராத்தின் சொத்து". வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்திய 35 ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்கும். அனைத்து உலக நாடுகளும் இந்திய பிரதமரின் அசைவுகளை உற்றுநோக்குகிறது. இந்திய வரலாற்றிலேயே வெற்றிகரமான பிரதமர், நரேந்திர மோடி தான் ” எனப் புகழாரம் சூட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x